அரச நிறுவனங்களின் செயற்திறனை அளவிடுவதற்கு பிரதான செயல்திறன் குறிகாட்டி (KPIs)

அரச நிறுவனங்களின் செயற்திறனை அளவிடுவதற்கு பிரதான செயல்திறன் குறிகாட்டிகளை (KPIs / Key Performance Indicators) அறிமுகப்படுத்த பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ நாமல் ராஜபக்ஷ தலைமையில் அண்மையில் (26) கூடிய குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகால கொள்கைத் தயாரிப்புக்கான முன்னுரிமைகளை அடையாளம் காண்பதற்கான தேசிய பேரவையின் உப குழுவில் தீர்மானிக்கப்பட்டது.

அரச பொறிமுறையை மிகவும் பயனுள்ளதாகவும் வினைத்திறனாகவும் மாற்றுவதற்கு அரச நிறுவங்கள் மற்றும் அரச அதிகாரிகளின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதற்கான அளவீடுகளை தயாரிக்கும் தேவை குறித்து குழுவில் வலியுறுத்தப்பட்டது.

அதற்கமைய, நிர்வாக சேவை உள்ளிட்ட ஏனைய நாடு தழுவிய அனைத்து சேவைகளையும் இணைத்து எதிர்வரும் வாரத்தில் கலந்துரையாடி கொள்கைகளை தயாரிக்கும் பணிகளை ஆரம்பிக்க இங்கு தீர்மானிக்கப்பட்டது.

பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, இலங்கை நிர்வாக சேவை சங்கம் ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தி அதிகாரிகள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.

இக்கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த, பாராளுமன்ற உறுப்பினர்களான பவித்ரா வன்னிஆராச்சி, வஜிர அபேவர்தன மற்றும் சாகர காரியவசம் ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.