ராஜஸ்தானில், முத்திரை தாள்களில் பதியப்பட்டு சிறுமிகள் ஏலம் விடப்படுவதாக வெளியாகி இருக்கும் தகவல், அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் பெண்கள் பாதுகாப்பு குறித்து அச்சம் எழுந்துள்ள நிலையில், இச்செய்தியின் உண்மைத்தன்மை குறித்து உடனடியாக அறியுமாறு, அம்மாநில அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ராஜஸ்தானில், 8 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுமிகள் ஏலம் விடப்படுவதாகவும், குறிப்பாக பணப்பறிமாற்றம் அல்லது கடனுக்காக அவர்கள் பயன்படுத்தப்படுவதாகவும், கடந்த அக்டோபர் 25-ம் தேதி, `தனிக் பாஷ்கர்’ என்ற இந்தி நாளிதழில் செய்தி வெளியானது. அதில், ’ஒருவேளை அந்தக் குழந்தைகள் அனுப்பப்படவில்லையெனில், செட்டில்மென்டுக்காக அவர்களின் அம்மாக்கள் சாதி பஞ்சாயத்துகளின் தீர்ப்பின் பேரில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுகின்றனர். இச்சிறுமிகள் உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், மும்பை, டெல்லி போன்ற இந்திய நகரங்கள், சில நேரங்களில் வெளிநாடுகளுக்கும் கூட அனுப்பி வைக்கப்படுகின்றனர். ஜெய்பூரில் இருந்து 340 கி.மீ. உள்ள பில்வாடா பகுதியில் நடத்தப்பட்ட நேரடி கள ஆய்வில் இது தெரியவந்தது. அந்த இடத்தில், ஆண் ஒருவர் தனது 15 லட்சம் ரூபாய் கடன் தொகையை செலுத்த முடியாததற்காக, தன் தங்கை மற்றும் 4 மகள்களை விற்க நிர்பந்திக்கப்பட்டு, விற்பனை செய்திருந்தார்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, தேசிய மனித உரிமை ஆணையம் ராஜஸ்தான் அரசுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்த நோட்டீஸில், ’இக்குற்றங்களால் பல பெண்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஊடக அறிக்கைகளின் உள்ளடக்கங்கள் ஒருவேளை உண்மையாக இருந்தால், இத்தகைய அருவருக்கத்தக்க நடைமுறையால், பாதிக்கப்பட்டவர்களுக்கு மனித உரிமை மீறல்கள் நிகழ்ந்திருப்பது உறுதியாகும்.
இதுகுறித்து விசாரிக்க, தலைமை செயலருக்கு கடிதம் அனுப்பப்படுகிறது. அடுத்த 4 வாரங்ககளுக்குள் அரசு முழு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். மாநிலத்தில் உள்ள மனித உரிமைகள் மற்றும் பெண்களின் கண்ணியத்திற்கு இடையூறு விளைவிக்கும் சாதி அடிப்படையிலான அமைப்பை ஒழிக்க, அரசியலமைப்பு விதிகள் அல்லது பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின்படி, கிராம பஞ்சாயத்தின் செயல்பாடுகளை மாநில அரசு எவ்வாறு உறுதி செய்கிறது என்பதை விளக்க வேண்டும்’ என்று தேசிய மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது.
ராஜஸ்தான் காவல்துறை தலைமை இயக்குநருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு, இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மற்றும் ஊக்குவிப்போர் மீது காவல்துறை எடுத்திருக்கும் நடவடிக்கை குறித்த விவரம் கேட்கப்பட்டுள்ளது.
– இன்பென்ட் ஷீலா