‘அண்டா‌ பிரியாணி’ கலவரமும், பாஜகவால் களமிறக்கப்பட்ட ஆளுநரும்: கே.பாலகிருஷ்ணன் கருத்து

சென்னை: கடந்த‌ காலத்தில் ‘அண்டா‌ பிரியாணி’ கலவரம் போன்ற சித்து விளையாட்டுக்களை‌ மக்கள்‌ தெளிவாக‌ உணர்ந்துவிட்டதால் ஆளுநரை பாஜக களமிறக்கி உள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் சாடியுள்ளார்.

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “பயங்கரவாதத்தை‌ உருவாக்கக் கூடிய இடமாக கோவை‌ உள்ளது என்று தமிழக ஆளுநர்‌ ரவி பேசியிருக்கிறார்.‌ ஒரு‌‌ தனித்த நிகழ்வை‌ காரணம் காட்டி, ஒட்டுமொத்த‌ மக்களை குற்றவாளி கூண்டில் நிறுத்துவது அவர் வகிக்கும் பொறுப்புக்கு அழகல்ல.

தென்னிந்தியாவின்‌ மான்செஸ்டர்‌ என புகழ்பெற்ற தொழில் – தொழிலாளர்‌ நகரமான‌ கோவையை அவமதிக்கும்‌ விதமானது‌ இந்தக் கருத்து. கோவையில்‌ நடந்த கார் வெடிப்பு‌‌ சம்பவத்தை அடுத்து,‌ துரிதமான முறையில் விசாரணை‌‌ நடத்திய காவல் துறை‌ – துப்பு‌ துலக்கியுள்ளது. ஆனால், தொடக்‌கம் முதலே‌ விசாரணையை‌ சிதைக்கும்‌ விதத்தில்‌ பாஜக‌ தலைவர் அண்ணாமலை பேசி வந்தார். அவரின் பேச்சுக்கள் கடும்‌ விமர்சனத்திற்கு‌ உள்ளாகின.

மக்களிடம்‌ பதற்றத்தைக் கிளப்பி, பந்த் செய்து கலகம் நடத்தலாம்‌ என்ற பாஜக/ சங் பரிவாரத்தின் குறுகிய அரசியல்‌ முயற்சி – அறிவிப்பிலேயே‌ பிசுபிசுத்துவிட்டது. கடந்த‌ காலத்திலேயே ‘அண்டா‌ பிரியாணி’ கலவரமும், தற்கொலையை‌ கொலையாக‌ சித்தரித்து பந்த் கலகமும்‌ செய்த சங்கி‌ சித்து விளையாட்டுக்களை‌ மக்கள்‌ தெளிவாக‌ உணர்ந்துவிட்டனர். எனவேதான், இப்போது வெட்கமற்ற முறையில்‌ ஆளுநரை களமிறக்கியுள்ளது பாஜக.

அவரும் எத்தை தின்றால் பித்தம்‌ தெளியும்‌‌ என்று‌ பேசிக் கொண்டுள்ளார். மக்களை அவமதிக்க துணிந்துவிட்டார்.‌ நாட்டின் பாதுகாப்பு தொடர்பான விசயங்களில் இவ்வாறு‌ பொறுப்பற்று பேசுவது‌ அவர் பதவிக்கு அழகல்ல என சுட்டிக்காட்டுகிறோம்” என்று அந்தப் பதிவில் அவர் கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.