சென்னை தெருக்களில் சுற்றித் திரியும் நாய்களை கொல்ல முடியாது. அதனை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி தெரிவித்தார்.
சென்னை பெருநகர சென்னை மாநகராட்சி மன்றக்கூட்டத்தில் நேரமில்லா நேரத்தில் 135-வது வார்டு பாஜக உறுப்பினர் உமா ஆனந்த் பேசினார். அப்போது அவர், “தெரு நாய்கள் அதிகமாக இருக்கிறது. வாகனங்களில் செல்லும்போது பலரை அவைகள் துரத்துகிறது. சிலரை கடித்துள்ளது. அவைகளை கட்டுப்படுத்த வேண்டும்” என்றார்.
அதற்கு பதிலளித மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி, “தெருநாய்களை குறைக்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. அதனை கொல்ல முடியாது. மாநகராட்சியில் 75 ஊழியர்கள் நாய்களை பிடித்து வருகின்றனர். அதற்கு மாநகராட்சியும், புளூகிராஸ் அமைப்பும் இனப்பெருக்க தடை சிகிச்சை செய்து வருகிறது. இந்த விஷயத்தில் மாநகராட்சி தீவிர நடவடிக்கை மேற்கொள்கிறது.
இதேபோல், மாடுகளை வீட்டில் வளர்க்க சென்னையில் தடையில்லை. ஆனால், சாலைகள், தெருக்களில் அதனை விடக்கூடாது. அவ்வாறு மேய்ச்சலுக்கு கொண்டு சென்றால், கயிறு மூலம் கட்டி உரிமையாளர் கூட்டிச் செல்ல வேண்டும். அதனை மீறி சாலைகள், தெருக்கள், கடற்கரை, பூங்காக்களில் சுற்றித்திரியும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டில் மட்டும் 5 ஆயிரத்து 447 மாடுகள் அவ்வாறு பிடிக்கப்பட்டு, அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது” என்றார்.