இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்தபோது, அங்கு கூடியிருந்த பொதுமக்கள், ‘கடிகார திருடன்’ என கோஷமிட்டனர். இதனால், லாகூர் நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நம் அண்டை நாடான பாகிஸ்தானின் பிரதமராக 2018 ஆக., முதல் 2022 ஏப்., வரை பதவி வகித்தவர் இம்ரான் கான்,70. பாக்., கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த இம்ரான், தெஹ்ரீக் – இ – இன்சாப் கட்சியை துவக்கி ஆட்சியைக் கைப்பற்றினார். ஆனால், எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தை சந்திக்காமல், கடந்த ஏப்ரலில் அவர் பதவியை ராஜினாமா செய்தார்.
தன் பதவிக் காலத்தில் வெளிநாட்டு அரசுகள், முக்கியப் பிரமுகர்கள் அளித்த வைர கடிகாரம் உள்ளிட்ட விலை உயர்ந்த பரிசுப் பொருட்களை அரசின் கருவூலத்தில் ஒப்படைத்தார். பின், அவற்றை சலுகை விலையில் வாங்கி, மிக அதிக விலைக்கு விற்று கொழுத்த லாபம் அடைந்துள்ளார்.
ஆனால், வருமான வரி கணக்கில் இந்த லாபத்தை மறைத்து விட்டார். இதுகுறித்து, எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தன.
இந்தக் குற்றச்சாட்டு குறித்து விசாரித்த பாகிஸ்தான் தேர்தல் ஆணையம், ஐந்து ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட இம்ரானுக்கு தடை விதித்தது. ஆணையத்தின் இந்த உத்தரவை எதிர்த்து, லாகூர் உயர் நீதிமன்றத்தில் இம்ரான்கான் வழக்கு தொடுத்தார். ஆனால், நீதிமன்றம் அதை தள்ளுபடி செய்து விட்டது.
இந்நிலையில், தான் நடத்தவுள்ள பேரணியில் பங்கேற்பதற்காக வழக்கறிஞர்களுக்கு அழைப்பு விடுக்க, லாகூர் வழக்கறிஞர்கள் சங்க அலுவலகத்துக்கு இம்ரான்கான் நேற்று வந்தார். உயர் நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள சங்கத்தில் வழக்கறிஞர்களை சந்தித்து பேசி விட்டு இம்ரான் வெளியே வந்தார்.
அப்போது அங்கு கூடியிருந்த பொதுமக்கள், அவரைப் பார்த்து ‘கடிகார திருடன்’ என கோஷமிட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement