இளைஞர்களுக்கு பிரதமர் மோடி அட்வைஸ்!

குஜராத் வேலைவாய்ப்பு முகாமில் காணொலி மூலம் உரையாற்றிய பிரதமர் மோடி, பல்வேறு நிலைகளில் உள்ள வெவ்வேறு பணியிடங்களுக்கான நியமன கடிதங்களைப் பெற்றுள்ள ஆயிரக்கணக்கான இளம் விண்ணப்பதாரர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். புனித நாளான தண்டேரா அன்று தேசிய அளவில் நாடு முழுவதும் 75,000 விண்ணப்பதாரர்களுக்கு நியமன கடிதங்களை வழங்கி வேலைவாய்ப்பு முகாமைத் தாம் தொடங்கி வைத்ததை நினைவு கூர்ந்த பிரதமர் மோடி, குஜராத் மாநிலம் விரைவாக முன்னேறி வருதாகவும், இன்று குஜராத் பஞ்சாயத்து சேவை வாரியத்தில் இருந்து 5000 பேருக்கும், குஜராத் துணை ஆய்வாளர் நியமன வாரியம் மற்றும் லோக்ரக்ஷக் நியமன வாரியத்தில் இருந்து 8000 பேருக்கும் கடிதங்கள் அளிக்கப்படுவதாக குறிப்பிட்டார்

இத்தகைய துரிதமான நடவடிக்கையை மேற்கொண்ட குஜராத் மாநில முதல்வருக்கும் அவரது குழுவினருக்கும் பிரதமர் பாராட்டு தெரிவித்தார். அண்மை காலங்களில் குஜராத் மாநிலத்தில் 10,000 இளைஞர்களுக்கு பணி நியமன கடிதங்கள் வழங்கப்பட்டிருப்பதோடு அடுத்த ஓராண்டில் 35,000 இடங்களை நிரப்ப இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருப்பதாகவும் பிரதமர் கூறினார்.

குஜராத்தில் ஏராளமான வேலை வாய்ப்புகளும், சுய வேலை வாய்ப்புகளும் உருவாவதற்கு மாநிலத்தின் புதிய தொழில்துறை கொள்கை தான் முக்கிய காரணம் என்று பிரதமர் குறிப்பிட்டார். ஓஜாஸ் போன்ற டிஜிட்டல் தளங்களையும், 3 மற்றும் 4-ஆம் நிலை இடங்களுக்கான நேர்காணல் முறையின் நீக்கத்தையும் அவர் பாராட்டினார். “அனுபந்தம்” செல்பேசி செயலி மற்றும் வேலை வாய்ப்பு இணையதளம் முதலியவற்றின் வாயிலாக மாநிலத்தில் வேலை தேடுபவர்களும், பணியமர்த்தும் நிறுவனங்களும் சுமூகமாக இணைக்கப்படுகின்றன என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

இதேபோன்ற வேலைவாய்ப்பு முகாம்கள் வரும் மாதங்களில் தேசிய மற்றும் மாநில அளவுகளில் தொடர்ந்து நடத்தப்படும் என்று பிரதமர் குறிப்பிட்டார். 10 லட்சம் வேலை வாய்ப்புகளை வழங்குவதற்காக மத்திய அரசு பணியாற்றி வரும் வேளையில், மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் இந்தப் பிரச்சாரத்தில் இணைவதன் காரணமாக வேலைவாய்ப்பு எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவு உயரும். “கடை கோடியில் உள்ள நபரையும் பிரச்சாரம் சென்றடைவதையும், அரசு திட்டங்களின் பலன்கள் முழுமையாக நிறைவடைவதையும் இது பெருமளவில் உறுதி செய்யும்”, என்று பிரதமர் கூறினார்.

2047-ஆம் ஆண்டிற்குள் வளர்ந்த நாடாக முன்னேறும் இந்தியாவின் உறுதிபாட்டில் இளைஞர்களின் முக்கிய பங்களிப்பை சுட்டிக்காட்டிய பிரதமர், சமூகத்திற்கும், நாட்டிற்குமான தங்களது கடமையை நிறைவேற்றுமாறு அவர்களைக் கேட்டுக்கொண்டார். வேலை கிடைப்பதை தங்கள் முன்னேற்றத்தின் இலக்காகக் கொண்டிராமல் இளைஞர்கள் தொடர்ந்து கற்றுக் கொண்டு, திறன் பெற வேண்டும் என்றும் பிரதமர் மோடி கோரிக்கை விடுத்தார்.

“இதன் மூலம் உங்களுக்கு பல்வேறு வாய்ப்புகள் அளிக்கப்படுகின்றன. உங்கள் வேலையை முழு அர்ப்பணிப்புடன் நீங்கள் செய்யும் போது வார்த்தைகளால் விவரிக்க முடியாத திருப்தி உங்களுக்கு ஏற்படுவதோடு வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கான பாதையும் வகுக்கப்படும்”, என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.