கோவையில் நடந்தது ஒற்றை ஓநாய் தாக்குதல் அல்ல: காவல் ஆணையர் விளக்கம்!

கோவை டவுன்ஹால் பகுதி கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகில் காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததில் கார் முழுவதும் சேதமடைந்ததோடு, காரில் இருந்த உக்கடம் பகுதியை சேர்ந்த ஜமேஷா முபின் என்ற இளைஞர் உடல் கருகி உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், ஜமேஷா முபினின் கூட்டாளிகளை கைது செய்துள்ளனர். இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

இதனிடையே, கோவை நடந்த கார் வெடிப்பு ஒற்றை ஓநாய் தாக்குதல் முறை என்ற தகவல் வெளியாகியது. பயங்ரவாத அமைப்புகள் சர்வதேச அளவில் தங்களது எதிரிகளை அழிக்க பின்பற்றும் ஒற்றை ஓநாய் தாக்குதல் முறையில் கோவையில் கார் வெடிப்பு சம்பவம் நடத்தப்பட்டிருக்கலாம் என தகவல்கள் வெளியாகின.

பயங்கரவாத சிந்தனை உடையவர்கள், தனிப்பட்ட முறையில் தாக்குதல் மேற்கொள்வதே ஒற்றை ஒநாய் முறை ஆகும். அல்கொய்தா, ஐஎஸ்ஐஎஸ் போன்ற பயங்கரவாத அமைப்புகள் இந்த தாக்குதல் முறையை பின்பற்றுவதாக கூறப்படுகிறது. சர்வதேச அளவில் இந்த முறையிலான தாக்குதல்கள் பயங்கரவாத அமைப்புகளால் அதிக அளவில் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையிலேயே கோவை தாக்குதலும் நடந்திருக்கலாம் என சந்தேகம் எழுந்தது.

இந்த நிலையில், கோவை நடந்த கார் வெடிப்பு ஒற்றை ஓநாய் தாக்குதல் முறை அல்ல என்று மாநகர காவல் ஆனையர் பாலகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார். “கோவையில் நடந்த கார் வெடிவிபத்து சம்பவத்தை ஒற்றை ஓநாய் தாக்குதல் முறை எனக்கூற முடியாது. ஏனெனில் இந்த சம்பவத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்களுக்கு பங்கு உள்ளது.” என்று கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.

முன்னதாக, ஜமேஷா முபின் வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில், ரயில் நிலையம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாநகர காவல் ஆணையர் அலுவலகம், மாநகராட்சி அலுவலகம், ரேஸ்கோர்ஸ் ஆகிய 5 இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டு, சங்கேதக் குறியீடுகளுடன் எழுதி வைக்கப்பட்டிருந்த டைரி, வெடிகுண்டுகள் தயாரிக்கப் பயன்படும் ரசாயனம், வயர்கள் உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சிலிண்டர் வெடித்ததாக கூறப்படும் காரில் அதிக அளவில் வெடிபொருட்கள் இருந்திருக்கலாம். அதன் காரணமாகவே கார் உருக்குலைந்து போயுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும், கோவை கார் வெடிப்பு சம்பவத்துக்கு முன்னர் ஜமேஷா முபின் தனது கூட்டாளிகளுடன் ஒத்திகை பார்த்துள்ள தகவல் வெளியாகியுள்ளது. அப்சர்கான், முகமது அசாருதீன் ஆகியோருடன் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் இரு சக்கர வாகனத்தில் சென்று இரண்டு அல்லது மூன்று முறை ஒத்திகை பார்த்துள்ளதாக தெரியவந்துள்ளது. கார் வெடிப்பு நடந்த தினத்துக்கு முந்தைய நாள் இரவு 11.35 மணிக்கு முபினின் வீட்டிலிருந்து பெரிய மூட்டை வெளியே எடுத்துச் செல்லப்பட்ட வீடியோவும் வெளியாகியுள்ளது.

சமையல் எரிவாயு சிலிண்டர்கள், டிரம்கள், வெடிகுண்டு தயாரிக்க பயன்படும் பொருட்கள் ஆகியவற்றையும் இணைந்தே வாங்கியுள்ளனர். சம்பவத்துக்கு சில நாட்கள் முன்பு வரை இவர்கள் அடிக்கடி சந்தித்து பேசியுள்ளனர் என்பதையும் போலீஸார் கண்டறிந்துள்ளனர். எனவே, இந்த தாக்குதல் ஜமேஷா முபின் மட்டுமல்லாமல் பல்வேறு நபர்களின் திட்டமிடலின்படி நடந்துள்ளதால், இது ஒற்றை ஓநாய் முறை தாக்குதலாக இருக்காது என்கின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.