தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழாவில் இன்று மாலையில் சூரசம்ஹாரம் நடைபெறவுள்ளது. இதையொட்டி அங்கு லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
திருச்செந்தூரில் கந்தசஷ்டி விழா கடந்த 25-ம் தேதி தொடங்கியது. தினமும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று (30-ம் தேதி) நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்படுகிறது. தொடர்ந்து மற்ற பூஜைகள் நடைபெறுகின்றன.
காலை 6 மணியளவில் யாகசாலை பூஜைகள் தொடங்குகின்றன. காலை 9 மணிக்கு மூலவருக்கு உச்சிகால பூஜை நடைபெறுகிறது. தொடர்ந்து பகல் 12 மணிக்கு ஜெயந்திநாதருக்கு யாகசாலையில் தீபாராதனை நடக்கிறது. 12.45 மணிக்கு வெள்ளிச் சப்பரத்தில் சுவாமி ஜெயந்திநாதர் யாகசாலையில் இருந்து எழுந்தருளி வேல் வகுப்பு, வீரவாள் வகுப்பு பாடல்களுடன் சண்முகவிலாசம் சேருகிறார். அங்கு தீபாராதனை நடைபெறுகிறது.
பிற்பகல் 2 மணிக்கு மேல் திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் சுவாமி ஜெயந்திநாதருக்கு அபிஷேகம், அலங்காரம் நடைபெறுகிறது. மாலை 4 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் சூரசம்ஹாரத்துக்காக கடற்கரையில் எழுந்தருளுகிறார். அங்கு கஜ முகம், சிங்க முகம் மற்றும் சுயரூபத்தோடு வரும் சூரபத்மனை லட்சக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் சுவாமி வதம் செய்கிறார். சூரசம்ஹாரம் முடிந்த பிறகு சந்தோச மண்டபத்தில் எழுந்தருளும் சுவாமிக்கும், அம்பாளுக்கும் தீபாராதனை நடைபெறுகிறது.
நாளை திருக்கல்யாணம்: இரவு 108 மகாதேவர் சன்னதி முன்பு சாயா அபிஷேகம் நடைபெற்று, பக்தர்களுக்கு சஷ்டி பூஜை தகடுகள் கட்டப்படும். நாளை (31-ம் தேதி) திருக்கல்யாணம் நடைபெறுகிறது. சூரசம்ஹாரத்தை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்து வருகின்றனர்.
580 பேருந்துகள்: தூத்துக்குடி முத்தம்மாள் காலனியில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனையில் மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் கூறும்போது, “திருச்செந்தூரில் சூரம்சம்ஹாரத்தை காண சுமார் 10 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து திருச்செந்தூருக்கு 580 அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன” என்றார்.
திருச்செந்தூரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது குறித்து திருநெல்வேலி சரக காவல்துறை துணைத்தலைவர் பிரவேஷ் குமார் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. 7 காவல் கண்காணிப்பாளர்கள், 3 கூடுதல் கண்காணிப்பாளர்கள் மேற்பார்வையில் 32 காவல் உதவி கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர்கள், 71 காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் உட்பட 3,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.