கடலைக்கூட்டு, கோதுமைப்புட்டு, வேர்க்கடலை புட்டு, காராமணிக் குழம்பு | வில்லேஜ் வீக் எண்டு ரெசிப்பீஸ்

விதம்விதமான இனிப்புகள், பலகாரங்கள் என சாப்பிட்டு மகிழ்ந்துவிட்டோம். அடுத்தடுத்த நாள்களில் வாய்க்கும் வயிற்றுக்கும் இதமான ஆரோக்கியமான உணவுகளைச் சாப்பிட்டு, உடலை சமன்படுத்த வேண்டாமா? கிராமத்துச் சமையலின் பிரபலமான சில ரெசிப்பீஸ் இங்கே உங்களுக்காக…. இந்த வாரக் கடைசியை வில்லேஜ் விருந்துடன் வெல்கம் செய்யுங்கள்….

சுரைக்காய் கடலைக் கூட்டு

தேவையானவை:

சிறிய சுரைக்காய் – ஒன்று (தோல் சீவி, பொடியாக நறுக்கவும்)

வறுத்த வேர்க்கடலை – 2 கைப்பிடி அளவு (தோல் நீக்கி, ஒன்றிரண்டாகப் பொடிக்கவும்)

தோலுரித்த சின்ன வெங்காயம் – 10

மஞ்சள்தூள் – சிறிதளவு

கடுகு – கால் டீஸ்பூன்

கறிவேப்பிலை – சிறிதளவு

சாம்பார் பொடி – தேவையான அளவு

எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

வறுத்து அரைக்க:

மல்லி (தனியா) – 3 டீஸ்பூன்

சீரகம் – ஒன்றரை டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் – 2

சுரைக்காய் கடலைக் கூட்டு

செய்முறை:

வறுத்து அரைக்கக் கொடுத்துள்ள பொருள்களை வெறும் வாணலியில் சேர்த்து வறுத்து, பொடியாக அரைத்து எடுக்கவும். குக்கரில் எண்ணெய்விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளிக்கவும். அதனுடன் சின்ன வெங்காயம், சுரைக்காய் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு உப்பு, மஞ்சள்தூள், சாம்பார் பொடி, வறுத்து அரைத்த பொடி, பொடித்த வேர்க்கடலை சேர்த்து, சிறிதளவு தண்ணீர் தெளித்து மூடி, ஒரு விசில்விட்டு இறக்கவும். ஆறியதும் மூடியைத் திறந்து மீண்டும் கலவை கெட்டியாகும் வரை கொதிக்கவிட்டு இறக்கவும்.

குறிப்பு:

மிளகாய் சேர்த்து அரைத்திருப்பதால், தேவையான அளவு மட்டும் சாம்பார் பொடி சேர்க்கவும். தண்ணீர் அதிகமாகச் சேர்த்துக் கொதிக்கவிட்டு, சாதத்துக்குக் குழம்பாகவும் செய்யலாம்.

கோதுமைப் புட்டு

தேவையானவை:

கோதுமை, சர்க்கரை, தேங்காய்த் துருவல் – தலா ஒரு கப்

நெய் – சிறிதளவு

உப்பு – ஒரு சிட்டிகை

கோதுமைப் புட்டு

செய்முறை:

வெறும் வாணலியில் கோதுமையைப் போட்டு, அடுப்பைச் சிறு தீயில் வைத்து வறுக்கவும். கோதுமை படபடவென்று வெடிக்க ஆரம்பிக்கும்போது இறக்கி வேறு பாத்திரத்துக்கு மாற்றவும். ஆறியதும் மிக்ஸியில் அரைத்து நன்கு சலித்து எடுக்கவும். சல்லடையின் மேல் தங்கும் கப்பியை மீண்டும் அரைத்துச் சலிக்கவும் (சலித்த கோதுமை சற்று கொரகொரப்பாக இருக்கும்).

அதனுடன் சிறிதளவு தண்ணீர், உப்பு சேர்த்து புட்டு மாவு பதத்துக்குப் பிசிறவும். பிறகு, தேங்காய்த் துருவல், சர்க்கரை, நெய் சேர்த்துக் கலந்து இட்லித் தட்டில் வைத்து ஆவியில் வேகவிடவும். கமகம கோதுமைப் புட்டு தயார்.

கத்திரிக்காய் – காராமணி குழம்பு

தேவையானவை:

கத்திரிக்காய் – 100 கிராம் (இரண்டு இஞ்ச் துண்டுகளாக நறுக்கவும்)

காராமணி – 25 கிராம் (வறுக்கவும்)

புளி – எலுமிச்சை அளவு

சாம்பார் பொடி – தேவையான அளவு

மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை

நல்லெண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்

வெந்தயம், கடுகு – 2 சிட்டிகை

கறிவேப்பிலை – சிறிதளவு

தோலுரித்த சின்ன வெங்காயம் – 10

உப்பு – தேவையான அளவு

வறுத்து அரைக்க:

தோலுரித்த சின்ன வெங்காயம் – 15

எள், சீரகம் – ஒரு டீஸ்பூன்

மல்லி (தனியா) – 3 டீஸ்பூன்

தக்காளி – ஒன்று

தேங்காய்த் துருவல் – ஒன்றரை டேபிள்ஸ்பூன்

எண்ணெய் – சிறிதளவு

கத்திரிக்காய் – காராமணி குழம்பு

செய்முறை:

காராமணியை ஒரு மணி நேரம் ஊறவைத்து, சிறிதளவு உப்பு சேர்த்து வேகவிட்டு எடுக்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டு வறுத்து அரைக்கக் கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்து வதக்கி, அரைத்து எடுக்கவும். புளியைத் தண்ணீரில் ஊறவைத்து, கரைத்து வடிகட்டவும். வாணலியில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய்விட்டு கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை தாளிக்கவும். அதனுடன் சின்ன வெங்காயம், கத்திரிக்காய், மஞ்சள்தூள், சாம்பார் பொடி, உப்பு சேர்த்து வதக்கவும். பிறகு புளிக்கரைசல், அரைத்த கலவை, காராமணி சேர்த்து நன்கு கொதிக்கவைத்து இறக்கவும்.

கொண்டைக்கடலை – பறங்கி புளிக்கூட்டு

தேவையானவை:

பறங்கிக்காய் – ஒரு கீற்று (தோல் சீவி, சதுர துண்டுகளாக்கவும்)

கறுப்புக் கொண்டக்கடலை – 100 கிராம்

புளி – எலுமிச்சை அளவு

கடுகு, உளுத்தம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன்

கறிவேப்பிலை – சிறிதளவு

மஞ்சள்தூள் – 2 சிட்டிகை

பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை

மிளகாய்த்தூள், எண்ணெய், உப்பு – தேவையான அளவு

வறுத்து அரைக்க:

கடுகு – ஒன்றரை டீஸ்பூன்

மல்லி (தனியா) – 2 டீஸ்பூன்

வெந்தயம் – ஒரு டீஸ்பூன்

கொண்டைக்கடலை – பறங்கி புளிக்கூட்டு

செய்முறை:

வறுத்து அரைக்கக் கொடுத்துள்ள பொருள்களை வெறும் வாணலியில் சேர்த்து வறுத்து அரைக்கவும். புளியைத் தண்ணீரில் ஊறவைத்துக் கரைத்து வடிகட்டவும். கொண்டைக்கடலையை எட்டு மணி நேரம் ஊறவைத்து, வேகவிட்டு எடுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் தாளிக்கவும். அதனுடன் பறங்கிக்காய் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு புளிக்கரைசல், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு, அரைத்த பொடி, வேகவைத்த கொண்டைக்கடலை சேர்த்து, அடுப்பை சிறு தீயில் வைத்துக் கொதிக்கவிடவும். கலவை கெட்டியாக வரும்போது இறக்கவும்.

வேர்க்கடலை புட்டு

தேவையானவை:

புட்டு மாவு – ஒரு கப்

கடுகு, உளுத்தம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன்

பச்சை வேர்க்கடலை – கால் கப்

கறிவேப்பிலை – சிறிதளவு

கடலைப்பருப்பு – 2 டீஸ்பூன்

தேங்காய்த் துருவல் – சிறிதளவு

மஞ்சள்தூள் – 2 சிட்டிகை

எண்ணெய், காய்ந்த மிளகாய், உப்பு – தேவையான அளவு

வேர்க்கடலை புட்டு

செய்முறை:

வேர்க்கடலையை 10 மணி நேரம் ஊறவைத்து, வேகவைத்து எடுக்கவும். புட்டு மாவுடன் 2 சிட்டிகை உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் தெளித்துப் பிசிறவும். இந்தக் கலவையை ஆவியில் வேகவைத்து எடுக்கவும். ஆறிய பிறகு உதிர்க்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, கிள்ளிய காய்ந்த மிளகாய் தாளிக்கவும். அதனுடன் வேகவைத்த வேர்க்கடலை, உதிர்த்த புட்டு, மஞ்சள்தூள், சிறிதளவு உப்பு சேர்த்து லேசாகத் தண்ணீர் தெளித்துப் புரட்டவும். மேலே தேங்காய்த் துருவல் தூவி இறக்கவும்.

குறிப்பு

வேகவைத்த புட்டு மாவுடன்… வேகவைத்த வேர்க்கடலை, நாட்டுச் சர்க்கரை, சிறிதளவு நெய், தேங்காய்த் துருவல் சேர்த்துக் கலந்தால்… இனிப்பு புட்டு ரெடி.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.