சியோல்: தென் கொரிய தலைநகர் சியோலில் நடைபெற்ற ஹாலோவீன் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 151 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.
கிறிஸ்தவ மதத்தில் புனிதர்களாகக் கருதப்படுபவர்களுக்கான தினமாக அக்டோபர் 31ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இந்த தினத்தை ஒட்டி கிறிஸ்தவர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபடுவது வழக்கம். ஹாலோஸ் ஈவ் என்ற இந்த கொண்டாட்டம் சியோலின் மத்தியில் உள்ள இதேவோன் மாவட்டத்தில் நேற்றிரவு கொண்டாடப்பட்டது. குறுகிய தெருக்கள் நிறைந்த இந்த பகுதியில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் தெருக்களில் கூடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 151 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பலர் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 270 பேர் காணாமல் போனதாகக் கூறப்படுவதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
மாரடைப்பு காரணமாக மயக்கமடைந்த ஏராளமானவர்களை வீதியிலேயே கிடத்தி அவர்களுக்கு அருகில் உள்ளவர்கள் முதலுதவி செய்யும் வீடியோ காட்சிகள் சோகத்தை ஏற்படுத்துவதாக உள்ளன. பாதிப்பு குறித்த தகவல் கிடைக்கப் பெற்றதை அடுத்து, அங்கு ஏராளமான போலீசாரும், தீயணைப்புத் துறை காவலர்களும் குவிக்கப்பட்டனர். உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைப்பது, காயமடைந்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து அவர்களை மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைப்பது, கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்துவது உள்ளிட்ட பணிகளை அவர்கள் துரிதப்படுத்தினர்.
இந்த சம்பவம் தென் கொரியாவில் மிகப் பெரிய சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. உயிரிழந்தவர்களில் பலரும் இளைஞர்கள் என கூறப்படுகிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள தென் கொரிய அதிபர் யோன் சுக் யோல், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், இன்று (அக். 30) துக்க தினமாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து அந்த நாட்டின் தேசியக் கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளன. இந்த விபத்துக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் உள்ளிட்டோர் ஆழ்ந்த வேதனை தெரிவித்துள்ளனர்.