தமிழகத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வடகிழக்கு பருவமழை நேற்று தொடங்கியுள்ளது. முதல் நாளில் மட்டும் 14 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. ஆனால் பெரிய அளவில் மழையை காண முடியவில்லை. படிப்படியாக மழையின் தீவிரம் அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது. இதற்கிடையில் இன்று முதல் 4 நாட்களுக்கு வானிலை முன்னெச்சரிக்கை அறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. இந்நிலையில் தலைநகர் சென்னையில் எப்போது மழை பெய்யத் தொடங்கும் எனக் கேள்வி எழுந்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை வடகிழக்கு பருவமழை தான் முக்கியமானது. ஏனெனில் இங்கு ஓராண்டில் பெய்யும் மொத்த மழையில் 68 சதவீதம் (867.4 மி.மீ) வடகிழக்கு பருவமழையால் கிடைக்கிறது. இதன் காரணமாக பள்ளி, கல்லூரிகள் அடுத்தடுத்து விடுமுறை விட வேண்டிய சூழலும் உண்டாகிறது. இதில் மிகவும் சிரமமான சூழலை சந்தித்து வருபவர்கள் மாவட்ட ஆட்சியர்கள். இவர்கள் தான் மழையின் தீவிரம் மற்றும் முன்னெச்சரிக்கை அறிவிப்பு பொறுத்து விடுமுறை தொடர்பான அறிவிப்புகளை வெளியிட வேண்டும்.
சில விடுமுறை நாட்களுக்கு மாற்று வேலை நாட்களும் அறிவிக்க வேண்டும். இவற்றையெல்லாம் சரியாக கையாள வேண்டியுள்ளது. எனவே விடுமுறை விட்டு விடலாமா? விடுமுறை விட்டால் மழை நின்று விடுமா? மாற்று வேலை நாட்கள் அறிவிக்க வேண்டுமா? இல்லை போதிய நாட்கள் இருக்கின்றனவா? என பலவிதங்களில் ஆராய்ந்தே முடிவெடுக்க வேண்டியிருப்பதால் மாவட்ட ஆட்சியர்கள் நிலை தான் சிரமம் என்று பலரும் கூறத் தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில் ”நவம்பர் பிறந்தாச்சு. அப்புறம் என்ன மழை விடுமுறைக்கு தயாராக வேண்டியது தானே. எங்கே சொல்லுங்க பார்க்கலாம். சென்னைக்கு எப்போது முதல் மழை விடுமுறை என்று? Option (a) நவம்பர் 1 (b) நவம்பர் 2 (c) நவம்பர் 3 (d) இந்த பருவமழைக்கு விடுமுறையே கிடையாது” என சமூக வலைதளங்களில் கருத்துக்கணிப்பு நடத்தும் அளவிற்கு சென்றுவிட்டனர்.
குறிப்பாக Chennai Rains என்ற ட்விட்டர் பக்கத்தில் கேள்வி கேட்டு, அதற்கு 3,100க்கும் அதிகமானோர் பதிலளித்துள்ளனர். இதற்கு பதிலளித்துள்ள தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான், “மேற்குறிப்பிட்ட மூன்று நாட்களுக்கும் வாய்ப்புள்ளது. அடுத்த வாரம் பள்ளி குழந்தைகளுக்கு ஒரே ஜாலி தான் போங்க. என்ன ஒரு விஷயம். மாவட்ட ஆட்சியர்களுக்கு தான் சிக்கல்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இது ட்விட்டரில் வைரலாகி வருகிறது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட லேட்டஸ்ட் தகவலின்படி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று (அக்டோபர் 30) கனமழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.