'காங்கிரஸின் '50 below 50' பார்முலா' – கார்கேவுக்கு புதிய தலைவலி?!

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக்கு தேர்தல் கடந்த 17-ம் தேதி நாடு முழுவதும் நடந்தது. இதில், மல்லிகார்ஜுன கார்கே 7,897 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதையடுத்து அவர் புதிய தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டார். பிறகு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் நிர்வாகிகள் அனைவரும் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். எனினும் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படும் வரை ஏற்கெனவே பதவியிலிருந்தவர்களே நீடிப்பார்கள் என்று கூறப்படுகிறது. இதன்படி மல்லிகார்ஜுன கார்கே, பொதுச் செயலாளர்கள், மாநில பொறுப்பாளர்கள், செயலாளர்கள், இணைச் செயலாளர்கள் ஆகிய பதவிகளில் இருப்போரை மாற்றி அமைக்க வேண்டும். கட்சியில் புதிய தலைவர் பதவியேற்கும் போது நிர்வாகிகள் மாற்றியமைக்கப்படுவது அக்கட்சியின் நடைமுறை தான். முன்னதாக காங்கிரஸ் கட்சியில்  50% இடங்களில் 50 வயதுக்குட்பட்டவர்களுக்குப் பதவிகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

மல்லிகார்ஜுன கார்கே

இதன்படி பார்த்தால் தற்போது பதவியில் உள்ள பலர் 50 வயதை கடந்து விட்டதால் மீண்டும் அவர்களுக்கு பதவி வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மற்றொருபுறம் புதியவர்களிடம் பொறுப்பை ஒப்படைப்பதிலும் பிரச்னை உள்ளது என்கிறார்கள் நிர்வாகிகள் சிலர். இதனால் காங்கிரஸின் ’50 below 50′ பார்முலாவின் படி புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வதில் அதன் தலைவர் கார்கேவுக்கு சவாலான சூழல் நிலவுவதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். 

இதுகுறித்து மேலும் அவர்கள் கூறுகையில், ‘புதிதாக காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றுள்ள  மல்லிகார்ஜுன கார்கேவின் முன்பு ஏராளமான சவால்கள் நிறைந்துள்ளன. குறிப்பாக வரவுள்ள 2024-ம் ஆண்டு மக்களவை தேர்தலில் பலம் வாய்த்த பா.ஜ.க – வை வீழ்த்துவதற்கான வியூகங்களை வகுக்க வேண்டும். இது தவிர மாநில தேர்தல்களும் நடக்க இருக்கிறது. இவற்றில் வெற்றி  பெற  தேவையான  நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

பா.ஜ.க தலைவரகள்

மேலும்  முக்கிய தலைவர்கள் வெளியேறுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும். இதைவிட 50 வயதுக்குட்பட்டவர்களுக்குப் பதவிகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி புதிய நிர்வாகிகள் தேர்வு செய்வதில் சிக்கல் உள்ளது. அதாவது வயதை காரணம் காட்டி ஏற்கனவே இருப்பவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படும் பட்சத்தில், அவர்களில் சிலர் புதிய நிர்வாகிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க மறுப்பு தெரிவிக்கக் கூடும்.  அவ்வாறு ஒத்துழைப்பு வழங்க மறுக்கும் பட்சத்தில் தேர்தலிலும் சிக்கல் ஏற்படக்கூடும்’ என்றனர்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய காங்கிரஸ் மூத்த நிர்வாகி ஒருவர், “வரும் நவம்பர் 1-ம் தேதி டெல்லியில் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. இதில், பல்வேறு இடங்களிலிருந்து வரும் முக்கிய தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். ஏற்கனவே கமிட்டியில் இருந்த சிலரை நீக்கிவிட்டு 47 பேரை மட்டும் வைத்து புதிய கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. 

ராகுல் காந்தி

இவர்கள் அனைவரும் வரும் 1-ம் தேதி கூடி முக்கிய முடிவுகளை எடுப்பார்கள். ஆனால் ’50 below 50′ பார்முலா அப்படியே செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்க முடியாது. தற்போது இளைஞர்களாக தங்களை கூறி வரும் முக்கிய நிர்வாகிகள் சிலர், புதிதாக இளைஞர்களாக வர விட மாட்டார்கள். அது சரியா இருக்காது” என்றார். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.