வெளிநாட்டு பணிக்கு அனுப்பி இளம்பெண்ணை மோசடி கும்பலுக்கு விற்ற சென்னை ஏஜன்டை புதுச்சேரி சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரியில் திருமணமாகி, வேலையின்றி இருந்த 27 வயது பட்டதாரி பெண், இணையதளத்தில் வெளிநாட்டு பணி தேடினார். அப்போது, கம்போடியா நாட்டில் தொலைபேசி அழைப்பாளர் பணிக்கு, முதலியார்பேட்டையை சேர்ந்த ஏஜன்ட் முருகனை அணுகினார். அவர், மாதம் ரூ.1 லட்சம் சம்பளம் என கூறி, விசா உள்ளிட்ட பணிக்கு ரூ., 3.25 லட்சம் செலவாகும் என்றார். இது தொடர்பாக சென்னை, மீஞ்சம்பாக்கத்தை சேர்ந்த ஏஜன்ட் ராஜ்குமாரிடம் பேரம் பேசினார். அதையடுத்து பணத்தை, முருகனிடம், இளம்பெண் வழங்கினார்.
முருகன் அப்பெண்ணை சுற்றுலா விசாவில் கம்போடியாவிற்கு அனுப்பினார். அங்கு, அவர் கூறிய நிறுவனத்திற்கு சென்ற போது, தொலைபேசி அழைப்பாளர் பணி தராமல் மோசடி வேலைகளில் ஈடுபட கூறியுள்ளனர். அதற்கு அவர் மறுத்தார். நிறுவன மேலாளர் ஆட்டிடோ, ஜான் ஆகியோர், ‘உன்னை ரூ. 2.76 லட்சத்திற்கு விலைக்கு வாங்கி உள்ளோம். நாங்கள் கூறும் பணியை செய்யாவிட்டால விபசார கும்பலிடம் விற்று விடுவோம்’ என மிரட்டினர்.
பின், அப்பெண்ணை, ஒரு அறையில் அடைத்து கொடுமைப்படுத்தி, அவரின் கணவருக்கும் மிரட்டல் விடுத்தனர்.
அங்குள்ள இந்தியர் ஒருவரின் உதவியால் அந்த கும்பலிடம் இருந்து தப்பி புதுச்சேரிக்கு வந்த பெண், கடந்த செப்., 12ம் தேதி, டி.ஜி.பி., மனோஜ்குமார் லாலை சந்தித்து, புகார் அளித்தார்.
டி.ஜி.பி., உத்தரவின் பேரில், சி.பி.சி.ஐ.டி., போலீசார், வழக்குப் பதிந்து, முருகனை கைது செய்து, சிறையில் அடைத்தனர். பின், சென்னை சென்ற தனிப்படை, ஏஜன்ட் ராஜ்குமாரை தேடியபோது கிடைக்கவில்லை.
எஸ்.பி., வீரவல்லவன் உத்தரவின் பேரில், இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு தலைமையிலான போலீசார், கம்போடியாவை சேர்ந்த மோசடி கும்பல் பற்றிய தகவலை சேகரித்தனர்.
இந்நிலையில், கடலுார் மாவட்டம், சிதம்பரத்தில் பதுங்கியிருந்த ராஜ்குமாரை,45; சி.பி.சி.ஐ.டி., போலீசார் நேற்று கைது செய்தனர். அவரை புதுச்சேரி அழைத்து வந்து, இது போல் எத்தனை பேரிடம் மோசடி செய்துள்ளார் என விசாரணை செய்தனர்.
பின், அவரை மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். இவ்வழக்கில் கம்போடியாவை சேர்ந்த ஆட்டிடோ, ஜான் ஆகியோரை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்