ஹைதராபாத்: தெலங்கானாவில் எம்எல்ஏக்களிடம் பேரம் பேசிய விவகாரத்தில், நேற்று ஹைதராபாத் உயர் நீதிமன்றத்தில் வெவ்வேறு தீர்ப்பு வெளியானதால் போலீஸார் குழப்பம் அடைந்தனர்.
கடந்த புதன்கிழமை இரவு, தெலங்கானாவில் ஆளும் டிஆர்எஸ் கட்சியின் தாண்டூரு தொகுதி எம்எல்ஏ பைலட் ரோஹித் ரெட்டி கொடுத்த தகவலின் பேரில் அவருக்கு சொந்தமான ஒரு பண்ணை வீட்டில், மொயினாபாத் போலீஸார் அதிரடியாக நுழைந்தனர். அங்கிருந்த டெல்லியை சேர்ந்த சத்தீஷ் ஷர்மா என்கிற ராமச்சந்திர பாரதி, ஹைதராபாத்தை சேர்ந்த நந்த கிஷோர், திருப்பதி சாமியார் சிம்ஹயாஜி ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
பாஜகவில் இணையும் டிஆர்எஸ் கட்சி எம்எல்ஏக்களுக்கு தலா ரூ.100 கோடி கொடுப்பதாகவும், உயர்மட்ட நிர்வாகிகளுக்கு தலா ரூ.50 கோடி கொடுப்பதாகவும் மூவரும் பேரம் பேசியதாக போலீஸார் தெரிவித்தனர்.
மறுநாள் இவர்களை ஹைதராபாத் லஞ்ச ஒழிப்புத்துறை நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்தினர். ஆனால் குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரம் இல்லை என்று கூறி மூவரையும் நீதிமன்றம் விடுவித்தது. எனினும் 24 மணி நேரத்துக்கு மூவரும் ஹைதராபாத்தை விட்டுச் செல்லக்கூடாது என நிபந்தனை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் 3 பேரை விடுவித்ததற்கு எதிராக ஹைதராபாத் உயர் நீதிமன்றத்தில் போலீஸ் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இதுபோல், இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரி ஹைதராபாத் உயர் நீதிமன்றத்தில் மாநில பாஜக பொதுச் செயலாளர் பிரேமானந்த ரெட்டி மனு தாக்கல் செய்தார். அவர் தனது மனுவில், “எவ்வித ஆதராமும் இல்லாமல் பாஜகவுக்கு அவப்பெயர் ஏற்படுத்துவதற்காக போலீஸாரும் ஆளும்கட்சியினரும் சேர்ந்து நாடகமாடுகின்றனர்” என குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த இரண்டு மனுக்களில், போலீஸார் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனு, ஹைதராபாத் உயர் நீதிமன்றத்தில் நேற்று முதலில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, “குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேரும் உடனடியாக சைபராபாத் காவல் நிலையத்தில் சரண் அடைய வேண்டும். அவர்களை போலீஸார், லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் ஆஜர் செய்த பின்னர், மருத்துவப் பரிசோதனைகளை நடத்த வேண்டும். மூவரையும் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க வேண்டும்” என நீதிபதி உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து, குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேரையும் போலீஸார் உடனடியாக கைது செய்து, சைபராபாத் போலீஸ் நிலையத்தில் ஆஜர் படுத்தினர். பிறகு அங்கிருந்து லஞ்ச ஒழிப்பு துறையிடம் ஒப்படைத்து, அவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை மற்றும் கரோனா பரிசோதனை நடத்தினர்.
இதனிடையே சிபிஐ விசாரணை கோரி பாஜக தொடர்ந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் மற்றொரு நீதிபதி முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, “இந்த வழக்கு வரும் 4-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது. அதுவரை இந்த விவகாரத்தில் எந்த விசாரணையும் நடத்தக்கூடாது” என உத்தரவிட்டார்.
ஒரே விவகாரத்தில் 2 விதமானதீர்ப்பு வந்ததால், மொயினாபாத் போலீஸார் குழப்பம் அடைந்தனர். எனினும் கைது செய்யப்பட்ட மூவரையும் லஞ்ச ஒழிப்புத் துறை நீதிபதி முன்னிலையில் நேற்று இரவு ஆஜர்படுத்தினர். விசாரணை இரவிலும் நீடித்தது.