விருதுநகர் மாவட்டம் ,ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியில் அமைந்துள்ளது செண்பகத்தோப்பு. இந்த மலைப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, கரடி, மான், காட்டெருமை என ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
பொதுவாக அடர் வனப்பகுதியில் வசித்துவரும் இந்த வனவிலங்குகள் சில நேரங்களில் உணவுத் தேடியும், சில நேரங்களில் வழித்தவறியும் மலையடிவார பகுதிக்கு வருவது வழக்கம்.
பெரும்பாலும் இரவு நேரங்களில் வனவிலங்குகள் நடமாட்டம் தென்படுவதால், மாலை 5 மணிக்கு மேல் வனப்பகுதிக்குள் யாரும் செல்லவேண்டாம் என வனத்துறை சார்பில் ஏற்கெனவே வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் கடந்த ஒரு வாரக்காலமாக ஸ்ரீவில்லிபுத்தூர் செண்பகத்தோப்பு பகுதியில் பகல் நேரத்தில் பேச்சிஅம்மன் கோயில் அருகே பெரிய பெண் காட்டு யானை ஒன்று உலவிக் கொண்டிருப்பதாக வனத்துறையினரிடம் மலைவாழ் மக்கள் தகவல் தெரிவித்தனர். அதன்படி, வனப்பகுதியில் யானையின் நடமாட்டத்தை வனத்துறை அதிகாரிகள் கண்காணித்து வந்தனர்.
இந்த சூழலில் கடந்த சில தினங்களாக பெய்த கனமழையின் காரணமாக செண்பகத்தோப்பு பகுதியில் உள்ள ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதையொட்டி பொதுமக்கள் ஏராளமானோர் ஆற்றில் குளிப்பதற்காக சென்று வருகின்றனர். எனவே செண்பகத்தோப்பு பகுதியில் பகல் நேரத்தில் உலவும் ஒற்றை காட்டு யானையால் ஆற்றில் குளிக்கச்செல்லும் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளதால், பொதுமக்கள் யாரும் வனப்பகுதிக்குள் செல்லவோ, ஆற்றில், குளிக்கவோ வேண்டாம் என வனத்துறை சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.