பிரிஸ்பேன்,
டி20 உலகக்கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் தற்போது சூப்பர் 12 சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெறும் போட்டியில் வங்காளதேச அணியும் ஜிம்பாப்வே அணியும் மோதுகின்றன.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பேட்டிங்கை தேர்வுசெய்துள்ளது. அதன்படி அந்த அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரராக களமிறங்கிய சவுமியா சர்கார் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான நஜ்முல் ஹொசேன் சிறப்பாக விளையாடி 71 ரன்கள் குவித்தார்.
கேப்டன் ஷகிப் அல் ஹசன் 23 ரன்கள் எடுத்தார். இறுதியில் வங்காளதேச அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்துள்ளது. இதையடுத்து 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே அணி விளையாடியது.
அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான மதவரே 4 ரன்னிலும், கேப்டன் கிரேக் எர்வின் 8 ரன்னிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். அடுத்து வந்த மில்டனும் 8 ரன்னில் ஆட்டமிழந்தார்.
தொடக்கத்திலேயே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த தவித்த அணியை வில்லியம்ஸ் சரிவில் இருந்து மீட்டார். இறுதிவரை போராடிய அவர் 74 ரன்களில் ஆட்டமிழந்தார்.
வெற்றிக்கு அருகில் வந்த ஜிம்பாப்வே அணியால், இலக்கை கடக்கமுடியவில்லை. இறுதியில் ஜிம்பாப்வே அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்தது. இதனால் 3 ரன்கள் வித்தியாசத்தில் வங்காளதேச அணி திரில் வெற்றிபெற்றது.