புதுடெல்லி: கத்தார் அமீருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசினார். இந்தியா-கத்தார் இடையே நட்புறவு மலர்ந்து அடுத்தாண்டுடன் 50 ஆண்டுகளை எட்டுகிறது. இதை கூட்டாக கொண்டாட இருநாட்டு தலைவர்களும் ஒப்புக்கொண்ட நிலையில், பிரதமர் நரேந்திர மோடி நேற்று கத்தாரின் அமீர் தமீம் பின் ஹமத் அல் தானியுடன் தொலைபேசியில் பேசினார். இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘கத்தாரின் அமீர் தமீம் பின் ஹமத் அல் தானியுடன் பேசுவதில் மகிழ்ச்சியடைகிறேன்.
அவரது அன்பான தீபாவளி வாழ்த்துக்களுக்கு நன்றி. கத்தாரில் உலகக் கோப்பை கால்பந்து போட்டி வெற்றிகரமாக நடைபெற தனது வாழ்த்துக்களை தெரிவித்தேன். 2023ல் 50 ஆண்டுகால இந்தியா-கத்தார் உறவுகளை கூட்டாக கொண்டாட நாங்கள் ஒப்புக்கொண்டோம்,’ என்று தெரிவித்துள்ளார்.