சென்னை புறநகர் பகுதிகளான பள்ளிகாரணை, மடிப்பாக்கம், செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் உள்ளிட்ட மழைநீரால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியில் அகல மூடுகால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை தமிழக முதலமைச்சர், அமைச்சர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த நிலையில், வடக்கிழக்கு பருவ மழை நேற்று துவங்கியதையடுத்து, இந்த பகுதிகளில், ஏற்கனவே இரண்டு முறை ஆய்வு மேற்கொண்ட தமிழக தலைமை செயலாளர் இறையன்பு ஐஏஎஸ் மீண்டும் இந்த பகுதிகளில் மூன்றாவது முறையாக இன்று நேரில் ஆய்வு செய்தார்.
பள்ளிகாரணை, மடிப்பாக்கம் மற்றும் வேளச்சேரி ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் மழைநீர் கால்வாய் பணிகளை ஆய்வு மேற்கொண்ட அவர், பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
மேலும், பல்லாவரம்-துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் நடைபெற்று வரும் அகல மூடுகால்வாய் பணிகளை ஆய்வு மேற்கொண்டு, கால்வாய்கள் அமையும் இடத்தை வரைப்படம் மூலம் பார்த்து அதிகாரிகளிடம் தகவல்களை கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது, சென்னை மாநகராட்சி ஆணையர் கக்கன் தீப் சிங் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
முன்னதாக, குன்றத்தூர், அனகாபுத்தூர், மாங்காடு உள்ளிட்ட இடங்களில் மழை நீர் வடிகால் பணிகளை தலைமை செயலாளர் இறையன்பு ஐஏஎஸ் நேற்று ஆய்வு செய்தார். அப்போது, பணியில் உள்ள தொய்வை சுட்டி காட்டி அதிகாரிகளுக்கு அறிவுறித்திய அவர், மழை, வெள்ளத்தால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டால் ஆதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்படுவர் எனவும் எச்சரிககி விடுத்தார்.
பருவமழை காலங்களில் மழை வெள்ளப் பாதிப்புகள் ஏற்படாத வகையில் அதிக அளவில் நீர் தேங்கும் இடங்களில் மழைநீர் வடிகால் பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அப்பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனாலும், பெரும்பாலான இடங்களில் மழைநீர் வடிகால் பணிகள் இன்னமும் முழுமையாக முடிவடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.