பெர்த்தில் இன்று நடைபெறும் இந்தியா-தென்ஆப்பிரிக்கா போட்டியில் மழை குறுக்கிட வாய்ப்பு?

பெர்த்,

8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில் சூப்பர்12 சுற்றுக்கு வந்துள்ள 12 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் இரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.பெர்த்தில் இன்று நடக்கும் ஆட்டம் ஒன்றில் முன்னாள் சாம்பியன் இந்தியா-தென்ஆப்பிரிக்கா (குரூப் 2) அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இந்த நிலையில், இந்த ஆட்டத்தில் மழை குறுக்கிட வாய்ப்பு இருக்கிறது. கடந்த 3 நாட்களாக மழை பெய்துள்ளது. எனினும், இன்று போட்டி நடைபெறும் நேரம் முழுவதும் மழை பெய்ய வாய்ப்பில்லை என்று ஆஸ்திரேலிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பெர்த்தில் இன்று மதியம் மற்றும் மாலை வேளைகளில் மழை பெய்ய 50 சதவீதம் வாய்ப்புள்ளது. வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். 25 முதல் அதிகபட்சமாக 45 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும்.

வெப்பநிலை 16 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும். காற்றில் ஈரப்பதம் 49 சதவீதம் ஆக இருக்கும். போட்டி நடைபெறும் நேரம் மழை குறுக்கிட 11 சதவீதம் வாய்ப்பு இருப்பதாக அங்குள்ள வானிலை மைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலக தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் இந்திய அணி ‘ஹாட்ரிக்’ வெற்றியை ருசித்து அரைஇறுதி வாய்ப்பை நெருங்கும் வியூகத்துடன் களம் இறங்கும். சமீபத்தில் சொந்த மண்ணில் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் தொடரை வென்றதால் இந்த அணி கூடுதல் நம்பிக்கையுடன் விளையாடும்.

பவுமா தலைமையிலான தென்ஆப்பிரிக்க அணியின் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு வலுவாக இருக்கிறது. அந்த அணியின் ரிலீ ரோசவ் சர்வதேச 20 ஓவர் போட்டியில் தொடர்ச்சியாக இரண்டு சதங்கள் அடித்து சூப்பர் பார்மில் இருக்கிறார்.

பெர்த் ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு அனுகூலமாக இருக்கும். பந்து நன்கு பவுன்ஸ் ஆகும். இதனால் தென்ஆப்பிரிக்காவின் வேகப்பந்து புயல்கள் அன்ரிச் நோர்டியா, ரபடா ஆகியோர் தங்களது ‘ஷாட் பிட்ச்’ தாக்குதல் மூலம் இந்திய அணியினருக்கு கடும் குடைச்சல் கொடுக்க முயற்சிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

வேகப்பந்து வீச்சை இந்திய பேட்ஸ்மேன்கள் எதிர்கொள்ளும் விதத்தை பொறுத்தே ஆட்டத்தின் போக்கு அமையும். மாலை 4.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடியாக ஒளிபரப்பு செய்கின்றன.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.