மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்ட தலைமை மீனவ கிராமமான தரங்கம்பாடியில் மயிலாடுதுறை, நாகை, காரைக்கால் ஆகிய 3 மாவட்ட மீனவர்களின் அவசர ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதில் 3 மாவட்டங்களை சேர்ந்த 21 கிராம மீனவ பஞ்சாயத்தார்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மயிலாடுதுறை, காரைக்கால், நாகை மாவட்ட மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு மற்றும் கொலை வெறி தாக்குதல் நடத்திய இந்திய கடற்படை மற்றும் ஒன்றிய அரசை கண்டித்து கடலூர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள மாவட்ட மீனவர்கள் சார்பில் வரும் 11ம் தேதி(வெள்ளிக்கிழமை) கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது.
கண்டன ஆர்ப்பாட்டம் எந்த இடத்தில் நடந்தாலும் மயிலாடுதுறை, நாகை, காரைக்கால் ஆகிய 3 மாவட்ட மீனவர்களும் இணைந்து நடத்த வேண்டும். அனைத்து மாவட்ட மீனவர்களும் அன்று மீன்பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்தம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.