பசும்பொன் முத்துராமலிங்கனாரின் 115ஆவது பிறந்தநாள் மற்றும் குருபூஜை விழா இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, ராமநாதபுரம் பசும்பொன்னில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
அதுமட்டுமின்றி, தமிழ்நாடு முழுவதும் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கனாரின் சிலைக்கும் பல்வேறு தரப்பினர் இன்று மரியாதை செலுத்தினர். அந்த வகையில், சென்னை நந்தனம் பகுதியில் அமைந்துள்ள முத்துராமலிங்கனாரின் சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மாலை அணிவித்து இன்று மரியாதை செலுத்தினார்.
இதன்பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர்,”உண்மையை பேசு,உறுதியாக பேசு அதை இறுதி வரை பேசு என்பதை எங்களுக்கு சொல்லி கொடுத்தவர், பசும்பொன் முத்துராமலிங்கனார்.
ஆளுநர் ஒண்ணுமே தெரியாமல் உலறக் கூடாது. அவர் எப்படி ஐபிஎஸ் ஆனார் என்றே தெரியவில்லை. ரிஷியின் வேலை நாட்டை காப்பதா?. ரிஷி என்பவர் அனைத்தையும் துறந்து செல்பவர் தானே. மக்களில் இருந்து மக்களுக்காக சேவை செய்பவர்களைதான் ஆளுநராக நியமன செய்ய வேண்டும். ஏதோ ஒரு பதவியில் இருந்து ஆளுநராக மாறும் நபர்களிடம் மக்களுக்கான நியாயம் என்ன இருக்கும்
முதலமைச்சர் ஸ்டாலின் கேரளாவில் சென்று மாநில சுயாட்சி பேசுகிறார். ஆனால், இங்கு இரட்டை ஆட்சி நடக்கிறது என சொல்கிறார்கள். இத்தனை காவல்துறை அதிகாரிகள் இருக்கும்போது, எதற்கு கோவை கார் வெடிப்பு வழக்கை தேசிய புலனாய்வு முகமைக்கு வழங்கினார்கள். அனைத்து உரிமைகளை மாநில அரசு இழந்து வருகின்றது.
பல நபர்கள் காவல்துறை காவிமயம் ஆகியுள்ளது என கூறுகின்றனர். இவர்கள் (பாஜக) காவல்துறையினரை திமுக என கூறுகின்றனர். பல மொழிகள் பேசக்கூடிய ஒரு ஒன்றியம் இது, பிரிவினையை தூண்டுவது இவர்கள்தான் (அரசியல்வாதிகள்) மக்கள் இல்லை” என அதிரடியாக பேசினார்.
கோயம்புத்தூர் கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கை என்ஐஏ-விடம் ஒப்படைப்பதில் நான்கு நாட்கள் காலதாமதம் ஏற்பட்டுள்ளதற்கும், உயர்மட்ட பயங்கரவாத சதித்திட்டத்தில் முக்கிய ஆதாரங்கள் அழிக்கப்பட்டதற்கும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கவலை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.