நாமக்கல் மாவட்டம், பரமத்தி அருகே இருக்கிறது பில்லூர். இந்த ஊரைச் சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 43). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த அவர் உறவினரான சந்திரசேகர் (43) என்பவருக்கும் இடையே நிலத் தகராறு இருந்து வந்ததாகத் தெரிகிறது. இது தொடர்பாக, அவர்களுக்கிடையில் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில், அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதனால், முத்துக்குமார் பரமத்தி காவல் நிலையத்தில் சந்திரசேகர், அவருடைய மனைவி பருவதம் மீது புகார் கொடுத்தார். அதன்பேரில் பரமத்தி காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் அசோக்குமார் (55) வழக்கு பதிவுசெய்து, விசாரணை நடத்தி வந்தார். இந்த வழக்கில் சந்திரசேகர், மனைவி பருவதம் ஆகியோர் மீது கைது நடவடிக்கை எடுக்காமல் இருக்க, சிறப்பு உதவி ஆய்வாளர் அசோக்குமார், சந்திரசேகரிடம் ரூ.10,000 லஞ்சம் கேட்டதாகச் சொல்லப்படுகிறது.
இதனால், அதிர்ச்சியடைந்த பருவதம் ஈரோட்டைச் சேர்ந்த விவசாயியான தன் சகோதரர் வேலுச்சாமியிடம் தெரிவித்தார். இதையடுத்து, வேலுச்சாமி சிறப்பு உதவி ஆய்வாளரிடம், ‘ஏன் அவ்வளவு லஞ்சம் கேட்கிறீர்கள்?’ என்று கேட்டுள்ளார். அப்போது வேலுச்சாமியிடம் சிறப்பு உதவி ஆய்வாளர் அசோக்குமார் ரூ.10 ஆயிரம் லஞ்சம் தருமாறு கேட்டதாகத் தெரிகிறது.
ஆனால், லஞ்சம் தர விரும்பாத வேலுச்சாமி, சிறப்பு உதவி ஆய்வாளரை வசமாக சிக்க வைக்க நினைத்துள்ளார். அதனால், வேலுச்சாமி, ‘ரூ.10,000 தர வழியில்லை. வேண்டுமானால் ரூ.5 ஆயிரம் வேண்டுமானால் ரெடி பண்ணி தருகிறோம்’ என்று சொல்லியிருக்கிறார். அசோக்குமாரும் வேறு வழியில்லாமல், அந்த தொகையை பெற ஒப்புக்கொண்டதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத வேலுச்சாமி, இது குறித்து நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறையிடம் புகார் கொடுத்தார்.
அவர் கொடுத்த புகார் அடிப்படையில், நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸார், ரூபாய் நோட்டுகளில் ரசாயன பவுடரை தடவி வேலுச்சாமியிடம் கொடுத்தனர். இதையடுத்து, கீரம்பூர் அருகே ராசாம்பாளையம் சுங்கச்சாவடி அருகே நின்ற சிறப்பு உதவி ஆய்வாளர் அசோக்குமாரிடம், வேலுச்சாமி ரூ.5,000 கொடுத்தார். அப்போது, சுங்கச்சாவடி பகுதியில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி ராமச்சந்திரன், இன்ஸ்பெக்டர் நல்லம்மாள் மற்றும் போலீஸார் லஞ்சம் வாங்கிய சிறப்பு உதவி ஆய்வாளர் அசோக்குமாரை கைதுசெய்தனர். அவரிடம் லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.