கோவை கார் வெடிப்பில் ஈடுபட்ட நபருடன் தொலைபேசியில் பேசியதாக கூறப்படும் நபரிடம் என்.ஐ.ஏ. உத்தரவின் பேரில் திருப்பூர் மாநகர காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூர் ராக்கியாபாளையம் பகுதியில் வசித்து வரும் அப்துல் ரசாக் (32) என்ற இளைஞரை கடந்த 2017-ம் ஆண்டு என்.ஐ.ஏ. விசாரித்து விடுவித்திருந்தது. இந்நிலையில் மீண்டும் என்.ஐ.ஏவின் உத்தரவின் கீழ் திருப்பூர் மாநகர போலீசார், வீட்டில் இருந்த அப்துல் ரசாகை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அரபு நாடுகளில் செயல்பட்டு வரும் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துக்கு இந்தியாவை சேர்ந்தவர்கள் ஆதரவு அளித்து ஆட்களை சேர்க்கும் பணியில் ஈடுபடுகிறார்களா? என்று நாடு முழுவதும் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் கடந்த 2017-ம் ஆண்டு தீவிர கண்காணிப்பு நடத்தினர். இந்த நிலையில் ஐ.எஸ். இயக்க ஆதரவாளர்களுடன் தமிழ்நாடு மற்றும் கேரளாவை சேர்ந்த சிலர் தொடர்பில் இருந்து வந்தது தேசிய புலனாய்வு அதிகாரிகளுக்கு தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கோவையில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் முகாமிட்டு 2 வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தினார்கள்.
இவர்களுடன் வேறு யாரும் தொடர்பில் இருந்தார்களா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தியதில் திருப்பூர் ராகியாபாளையம் பகுதியை சேர்ந்த அப்துல் ரசாக்(30) என்பவரிடம் விசாரணை மேற்கொண்டனர். பனியன் தொழிலாளியான இவர் ஐ.எஸ். இயக்கம் தொடர்பாக ஃபேஸ்புக்கில், தொடர்பில் இருந்ததாகக் கூறி அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். காலை முதல் இரவு வரை அப்துல் ரசாக்கிடம் விசாரணை நடத்தி விட்டு தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் திருப்பூரில் இருந்து புறப்பட்டு சென்றனர்.
இதனைத்தொடர்ந்து அப்துல் ரசாக்கை என்.ஐ.ஏ கண்காணிப்பில் வைத்திருந்தது. இதனிடையே கோவை சிலிண்டர் குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து என்.ஐ.ஏ விசாரணையை துவக்கி உள்ள சூழலில், இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் கண்காணிப்பு வளையத்தில் உள்ள அப்துல் ரசாக்கிடமும் விசாரணை நடத்த திட்டமிட்டு இருந்தது.
இந்த நிலையில் கோவை சம்பவத்தில் தொடர்புடைய ஒருவரிடம் இவர் போனில் பேசியதாக தெரியவந்துள்ளது. அதன் அடிப்படையில் அப்துல் ரசாக்கை காவலில் எடுத்து விசாரிக்க என்.ஐ.ஏ திருப்பூர் மாநகர போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் திருப்பூர் மாநகர போலீசார் அப்துல் ரசாக்கை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை நடத்தும் இடம் ரகசியமாக இருக்க வேண்டும் என்பதால், கனியாம்பூண்டி, நல்லூர் என இடங்களை மாற்றி மாற்றி போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை அறிக்கை என்.ஐ.ஏ.விடம் சமர்ப்பிக்க உள்ளதாகவும், அதன் பின்னர் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து என்.ஐ.ஏ. தான் முடிவு செய்யும் எனவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்கலாமே: கோவை கார் வெடிப்பு எதிரொலி: இருவரது வீடுகளில் நாகை போலீசார் சோதனைSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM