‘எந்த ஒரு நாடும் ஏதாவது ஒரு மதத்தைச் சார்ந்துதான் இருக்க முடியும்; இதில் இந்தியா விதிவிலக்கு அல்ல’ என்று ஆளுநர் ஆர்.என். ரவி பேசியதற்கு திமுக உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கூட்டாக கண்டனம் தெரிவித்துள்ளனர்.
திமுக, மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், காங்கிரஸ், மனித நேய மக்கள் கட்சி, முஸ்லீம் லீக், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள கூட்டறிக்கை:
தமிழ்நாடு ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்றது முதல், நாள்தோறும் ஏதாவது சர்ச்சைக்குரிய கருத்தைச் சொல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அதற்குக் காரணம், தமிழ்நாட்டில் தேவையற்ற வீண் சர்ச்சைகளை உருவாக்கி குழப்பம் ஏற்படுத்தும் நோக்கமா, அல்லது தன்னை நோக்கிய கவனிப்பு எப்போதும் இருக்க வேண்டும் என்ற தாகமா எனத் தெரியவில்லை.
எதுவாக இருந்தாலும், சனாதனம், ஆரியம், திராவிடம், பட்டியலின மக்கள், திருக்குறள் ஆகியவை குறித்து அவர் கூறும் கருத்துகள் அபத்தமானவையாகவும், ஆபத்தானவையாகவும் இருக்கின்றன. ஆளுநரின் தனிப்பட்ட ஆன்மீக நம்பிக்கைகள் குறித்து நமக்கு எந்த விமர்சனமும் இல்லை; அது பற்றி கவலைப்படவுமில்லை. ஆனால், அரசியலமைப்புச் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஆளுநர் பதவியில் இருந்து கொண்டு, பழமைவாத நச்சரவங்களை நாட்டில் நடமாட விடுவது அவருக்கும் அழகல்ல; அவர் வகிக்கும் பதவிக்கும் அழகல்ல!
அவர் உதிர்க்கும் அபத்த வகை கருத்துகளுக்கு எதிராகப் பலராலும் சொல்லப்படும் விளக்கங்களை அவர் ஏற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை. தன்னை மாற்றிக் கொண்டதாகவும் தெரியவில்லை. வழக்கம் போல, தனது பேச்சுகளைத் தொடர்ந்து கொண்டே வருகிறார் ஆளுநர்.
இந்த வரிசையில், இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமாகவே ஆளுநர் பேசத் துணிந்து விட்டார். அது அவர் எடுத்துக்கொண்ட பதவிப் பிரமாணத்திற்கே எதிரானது என்பதையாவது உணர்ந்துதான் பேசுகிறாரா?
“இந்தியாவை மதச்சார்பற்ற நாடு எனச் சொல்கின்றனர். எந்த ஒரு நாடும் ஏதாவது ஒரு மதத்தைச் சார்ந்துதான் இருக்க முடியும். அதில் இந்தியா விதிவிலக்கு அல்ல” என்று பேசி இருக்கிறார் ஆளுநர். அதாவது தன்னைத்தானே இந்திய நாடாளுமன்றமாக, தன்னையே உச்சநீதிமன்றமாக, தானே இந்தியாவின் குடியரசுத் தலைவர் என – இன்னும் சொன்னால், இந்திய நாட்டின் மன்னராகவே அவர் நினைத்துக் கொண்டு பேசத் தொடங்கி இருக்கிறார். அவருக்கு உலக வரலாறும் தெரியவில்லை; இந்திய அரசியலமைப்புச் சட்டமும் தெரியவில்லை என்பது இதன் மூலம் தெரிகிறது.
ஐக்கிய நாடுகள் அவை அங்கீகரித்த நாடுகள் 195 என்றால், அதில் 30 நாடுகளை மட்டும்தான் மதச்சார்புள்ள நாடுகளாக சர்வதேச ஆய்வு அமைப்பு ஒன்று சொல்கிறது. அதாவது குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே அங்கு நாட்டுத் தலைவர்களாக ஆகமுடியும். 29-க்கும் மேற்பட்ட நாடுகள் மதச்சார்பும் – சார்பின்மையும் கொண்ட நாடுகள். மற்றபடி 120-க்கும் மேற்பட்ட நாடுகள் மதச்சார்பற்ற நாடுகள்தான். இந்து நாடாகச் சொல்லிக் கொண்ட நேபாளம் கூட இப்போது, ‘மதச்சார்பற்ற கூட்டாட்சி முறையைப் பின்பற்றும் நாடாளுமன்றக் குடியரசு’தான். (நேபாள அரசியல் சட்டம் பிரிவு 4)
மதச்சார்பற்ற இந்த நாடுகளில் எல்லாம் மதங்கள் உண்டு; அரசும் உண்டு. ஆனால் இரண்டுக்கும் தொடர்பு இல்லை. இது எதுவும் தெரியாமல், ‘எந்த ஒரு நாடும் ஏதாவது மதத்தைச் சார்ந்துதான் இருக்க முடியும்’ என்று ஆளுநர் சொல்வது உலகம் அறியாப் பேச்சாகும்.
அதேபோல் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரைக்கு எதிராக ஆளுநர் பேசுவதையும், கருத்து சொல்வதையும் நிறுத்திக் கொள்ள வேண்டும். ‘மதச்சார்பற்ற’ நாடு இது என்கிறது அரசியலமைப்புச் சட்டம். ஒரு மதத்துக்கு வக்காலத்து வாங்குபவராக ஆளுநர் தன்னைக் காட்டிக் கொள்கிறார். இதுவே அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது. அனைத்து மதங்களுக்கும் நடுநிலையானவராகவே ஆட்சியாளர்கள் இருக்க வேண்டும். அனைத்து மதங்களுக்கும் சமமான உரிமைகளே உண்டு என்கிறது இந்திய அரசியலமைப்புச் சட்டம்.
அனைத்து மதத்தவரும் சமம் (14), மதத்தில் பாகுபாடு கூடாது (15), அனைவருக்கும் சமமான உரிமை (16), விரும்பும் மதத்தைப் பின்பற்றுவதற்கு உரிமை (25), தங்களது மதத்தைப் பிரச்சாரம் செய்யும் உரிமை (26), மதத்தை வளர்க்க வரி செலுத்தத் தேவை இல்லை (27), அரசு நிறுவனங்களில் மதக் கல்வி கூடாது (28), சிறுபான்மையினர் கல்வி நிறுவனம் நடத்த உரிமை (30), மதம் தாண்டிய இணக்கம், சகோதரத்துவம் பரப்புவது ஒவ்வொரு குடிமகனின் கடமை, மத அடிப்படையில் வாக்காளர் பட்டியலில் விடுபடுதல் இருக்கக் கூடாது (325) – இவை அனைத்தும் அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ளவை. இவை அனைத்துக்கும் எதிராகப் பேசுகிறார் ஆளுநர்.
எஸ்.ஆர்.பொம்மை எதிர் இந்திய ஒன்றியம் வழக்கில் தீர்ப்பளித்த ஒன்பது நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, மதச்சார்பின்மைக் கொள்கையை நமது அரசியல் சாசனத்தின் அடிப்படையான பண்புகளில் ஒன்றாகச் சொல்கிறது. அரசு நடவடிக்கைகளில் மதச்சார்பு கூடாது என்றும், மதம் சார்ந்ததாக மாநில அரசு செயல்பட்டால் அதனைக் கலைக்கலாம் என்றும் நீதியரசர்கள் சொன்னார்கள். அந்த வகையில் ஆளுநர் , உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு முரணாகப் பேசுகிறார்.
இவை அனைத்தும் தெரிந்தே, வேண்டுமென்றே குழப்பம் ஏற்படுத்தும் எண்ணத்தோடு ஆளுநர் பேசுகிறார்கள் என்றே பகிரங்கமாகக் குற்றம் சாட்டுகிறோம்; கண்டனம் தெரிவிக்கிறோம்.
ஆளுநர் பொறுப்பில் இருந்துகொண்டு பேசுவதால்தான் இந்தளவுக்கு இதற்கு முக்கியத்துவம் தர வேண்டி உள்ளது. இதனை விடப் பெரிய பதவி எதையாவது எதிர்பார்த்து பா.ஜ.க. தலைமையை மகிழ்விக்க ஆர்.என்.ரவி இப்படிப் பேசுவதாக இருந்தால், அவர் தனது ஆளுநர் பதவியை விட்டு விலகி விட்டு, இதுபோன்ற கருத்துகளைச் சொல்லட்டும். மாறாக, அப்பொறுப்பில் இருந்துகொண்டு பேசுவதை இனியாவது நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.