தெலுங்கு திரையுலகின் பிரபலமான தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர்களில் ஒருவர் தான் தயாரிப்பாளர் தில் ராஜு, இதுவரை திரையுலகில் வெற்றிகண்டு வந்த இவர் தற்போது பெரிய சிக்கலில் மாட்டிக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இவரது நெருக்கடியான சூழ்நிலைக்கு காரணம் என்னவென்றால் விஜய் நடிக்கும் ‘வாரிசு’ படம், வம்சி பைடிப்பள்ளி இயக்கும் இந்த படத்தை தில் ராஜு தனது ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரித்து இருக்கிறார். இந்த படத்தில் ராஷ்மிகா, குஷ்பூ, ஷாம், சரத்குமார், ஜெயசுதா என பல நட்சத்திர பட்டாளங்கள் இணைந்து நடித்திருக்கின்றனர். விஜய் ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து கொண்டிருக்கும் இந்த படத்தை படக்குழு 2023ம் ஆண்டின் பொங்கல் பண்டிகை விருந்தாக அளிக்க முடிவு செய்து அதன்படி படத்தின் அதிகாரபூர்வ வெளியீட்டு தேதியையும் அறிவித்திருந்தது.
‘வாரிசு’ படம் வெளியாகப்போகும் அதே பொங்கல் பண்டிகை சமயத்தில் வரிசையாக பல முன்னணி நடிகர்களின் படங்களும் வெளியீட்டிற்காக காத்துக்கொண்டிருக்கிறது, அதனால் தயாரிப்பாளர் தில் ராஜுவால் வாரிசு படத்தின் வெளியீட்டை தள்ளிப்போடவும் முடியாது. ஏற்கனவே விஜய்யின் வாரிசு படத்திற்கு போட்டியாக தமிழ் சினிமாவின் மற்றொரு பிரபலன நாயகனான அஜித்தின் ‘துணிவு’ படமும் பொங்கல் பண்டிகை சமயத்தில் வெளியாகவுள்ளது. இதனால் தமிழ்நாட்டில் விஜய் மற்றும் அஜித் படங்களுக்கு இடையே மிகப்பெரும் மோதல் இருக்கும் என்பதில் சிறிதும் சந்தேகத்திற்கு இடமில்லை. தமிழ் திரையுலகில் தான் இப்படி இருக்கிறது என்று பார்த்தால் தெலுங்கு திரையுலகில் இதைவிட நிலைமை இன்னும் மோசமாக இருக்கிறது.
பொங்கல் பண்டிகையையொட்டி தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களான சிரஞ்சீவியின் ‘வால்டர் வீரைய்யா’, பாலக்ரிஷ்ணாவின் ‘வீர சிம்ம ரெட்டி’ ஆகிய படங்கள் வெளியாகவுள்ளது. இப்படி இருக்கையில் வாரிசு படத்திற்கு திரையரங்குகளை ஒதுக்குவது படத்தை வாங்குபவர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் மிகப்பெரிய வேலையாக இருக்கும். இந்த மூன்று பெரிய ஹீரோக்களின் படங்கள் வெளியாவதால் விஜய்யின் ‘வாரிசு’ படத்திற்கு முன்னுரிமை கிடைக்காது என்றும், ஏற்கனவே இந்த படத்திற்கு தெலுங்கு திரையுலகில் அந்த அளவிற்கு எதிர்பார்ப்பு இல்லையென்றும் கூறப்படுகிறது. இருப்பினும் தயாரிப்பாளர் தனது செல்வாக்கை பயன்படுத்தி ‘வாரிசு’ படத்தை அதிக திரையரங்குகளில் வெளியிட்டாலும் மற்ற மூவர் படத்திற்கு ரசிகர்கள் காட்டும் ஆர்வம் இந்த படத்திற்கு இருக்காது என்றும் கூறப்படுகிறது, இதனால் தயாரிப்பாளர் தில் ராஜு மிகவும் கவலையில் இருப்பதாக கூறப்படுகிறது.