தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த 29ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இதையடுத்து நாள்தோறும்
கனமழை
வெளுத்து வாங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சென்னையில் முதல் இரண்டு நாட்கள் பெரிதாக மழையை காண முடியவில்லை. இந்நிலையில் மூன்றாம் நாளான இன்று (அக்டோபர் 31) நகரின் பல்வேறு பகுதிகளில் அதிகாலை முதலே கனமழை பெய்யத் தொடங்கியது.
குறிப்பாக மெரினா, அடையாறு, அண்ணா சாலை, ஆழ்வார்ப்பேட்டை, வேளச்சேரி, பாரீஸ் கார்னர், ராயபுரம், வண்ணாரப்பேட்டை, தேனாம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படும் என்ற எதிர்பார்ப்பு உருவானது. ஆனால் சில மணி நேரங்களில் மழை அப்படியே நின்றுவிட்டது. இதன் காரணமாக விடுமுறைக்கான வாய்ப்புகள் பெரிதும் குறைந்தன.
இதற்கிடையில் சென்னை வானிலை ஆய்வு மையத்தின் காலை நேர அறிக்கை வெளியாகியுள்ளது. அதன்படி, அடுத்த ஒன்று அல்லது இரண்டு மணி நேரத்திற்கு சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் பரவலான மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் அடுத்த சில நிமிடங்களில் மழை பெய்யத் தொடங்கும் என்று தெரிகிறது. இதனை சரியாக கவனித்து விடுமுறை தொடர்பாக மாவட்ட ஆட்சியர் முக்கிய முடிவு எடுக்க வேண்டியுள்ளது. அதுமட்டுமின்றி சில தனியார் வானிலை ஆய்வாளர்கள் கூறுகையில், இன்று பிற்பகல் முதல் கடலோர தமிழகத்தில் பரவலான மழை பெய்யக்கூடும். இது படிப்படியாக நகர்ந்து கிழக்கு மற்றும் உட்புறப் பகுதிகளுக்கு நகரக்கூடும்.
இதனால் சென்னை, புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்பிருக்கிறது. குறிப்பாக புலிகாட் முதல் கோவளம் வரையிலான பகுதிகளில் இடியுடன் கூடிய மிகக் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. எனவே காலையில் மழை இல்லை என்றாலும் பிற்பகல் வேளையில் மழை வெளுத்து வாங்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக பருவமழை தொடங்கியதை குறிப்பிட்டு, சென்னையில் முதல் மழை விடுமுறை எப்போது? என்று இணையத்தில் கருத்துக்கணிப்பு நடத்த தொடங்கிவிட்டனர். நவம்பர் 1, நவம்பர் 2, நவம்பர் 3, இல்லையெனில் இந்த பருவமழைக்கு விடுமுறையே கிடையாதா? என ஆப்ஷன்களை வழங்கி அதகளம் செய்து வருகின்றனர். இதனால் சென்னையில் முதல் விடுமுறைக்காக மாணவ, மாணவிகள் காத்திருக்கின்றனர்.