சேலம், மேச்சேரி அருகே கீரைக்காரனூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை, அதே பகுதியைச் சேர்ந்த சின்னண்ணன் மகன் சுபாஷ் சந்திர போஸ் என்பவர் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். ஒருநாள், அப்பெண்ணின் வீட்டிற்குச் சென்று, திருமணம் செய்து கொள்வதாக கூறி பெண் கேட்டுள்ளார். ஆனால் அவரின் பெற்றோர் திருமணத்திற்கு மறுத்துவிட்டனர். இதனால் ஆத்திரமடைந்த சுபாஷ் சந்திரபோஸ் பட்டதாரி பெண்ணின் குடும்பத்தை பழிவாங்கப் போவதாக கூறி மிரட்டி வந்துள்ளார் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் ஒன்பது மாதங்களுக்கு முன்பு அந்தப் பெண் வீட்டில் தனியாக இருந்த போது திடீரென உள்ளே புகுந்து சுபாஷ் சந்திரபோஸ், கதவை தாழிட்டு கத்தி முனையில் அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதனை வெளியில் சொன்னால் குடும்பத்தோடு கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார். இதனால் பயந்து போன அந்த பெண் வீட்டில் யாரிடம் கூறாமல் இருந்துள்ளார்.
இந்நிலையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண் கர்ப்பமடைந்ததால், விஷயம் வீட்டுக்கு தெரிய வந்திருக்கிறது. இந்தநிலையில் கடந்த ஐந்தாம் தேதி வயிற்று வலியால் துடித்தவரை ஓமலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. மேற்கொண்டு பெண்ணிடம் விசாரித்ததில், சுபாஷ் சந்திர போஸ் பாலியல் வன்கொடுமை செய்ததை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரின் பெற்றோர் சம்பந்தப்பட்ட சுபாஷ் சந்திரபோஸ், அவரின் தந்தை சின்னண்ணன், தாயார் நல்லம்மாள் மற்றும் கூனாண்டியூர் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் கோவிந்தன் ஆகியோரிடம் பேசி பெண்ணின் எதிர்காலத்தை கருதி தங்களது மகளை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டுள்ளனர். ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த நான்கு பேரும் அவர்களை மிரட்டி அனுப்பியதாக சொல்லப்படுகிறது.
இதுகுறித்து மேச்சேரி காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் புகார் தெரிவித்தார். இதன்பேரில் எஸ்.ஐ., சாந்தி விசாரித்து சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் அவரது பெற்றோர் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் கோவிந்தன் ஆகியோர் மீது கட்டாயப்படுத்தி கத்தியை காட்டி மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தல், கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, சுபாஷ் சந்திர போசை கைது செய்துள்ளார். மேலும் இதில் தலைமறைவாக உள்ள நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.