வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய 3 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை நேற்று முன்தினம் தொடங்கிய நிலையில் கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதேபோல் தமிழகத்திலும் ஒரு சில பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் இலங்கை கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக வரும் நவம்பர் 3ம் தேதி வரை தமிழகத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி இன்று முதல் நவம்பர் 3ம் தேதி வரை தமிழகம் புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி இன்று, திருவண்ணாமலை, திருப்பத்தூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும், காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய 3 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.