குஜராத் தொங்கு பாலம் : விபத்துக்கு காரணம் இளைஞர்களா? – வைராலகும் வீடியோ… முழு விவரம்

குஜராத்தின் அகமதாபாத் நகரில் இருந்து சுமார் 300 கி.மீ., தூரத்தில் அமைத்திருந்திருக்கும் மோர்பி தொங்கு பாலம், நேற்று 6.42 மணியளவில் மொத்தமாக இடிந்து விபத்துக்குள்ளானது.  பாலம் இடிந்து விழுந்ததில், இதுவரை 132 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 177 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து மீட்புப்பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மச்சு ஆற்றின் குறுக்கே ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இந்த தொங்கு பாலம் கட்டடப்பட்டுள்ளது. மச்சு ஆற்றில், சத்பூஜா என்ற பண்டிகையை முன்னிட்டு சடங்குகள் செய்ய வந்தபோது, 500 பேர் ஒரே நேரத்தில் பாலத்தில் நின்றபோது விபத்து ஏற்பட்டுள்ளது. 

தேசிய பேரிடர் மீட்புப் படையின் 5 குழுக்கள் இடிப்பாடுகளுக்குள் சிக்கிய மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். பின்னர், ராணுவம், கப்பல் படை, விமானப்படை ஆகியவை மீட்புப் பணியில் களமிறங்கின. படகுகளை கொண்டு மீட்புப் பணி நடைபெற்ற நிலையில், படுகாயத்துடன் 19 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்தில் இருந்து வெளியாகும் காட்சிகளில், அங்கு பெண்கள், குழந்தைகள் ஆகியோரும் இருப்பது தெரிகிறது. சிலர் ஆற்றில் நீச்சல் அடித்து கரை திரும்பினர். கடந்த 7 மாதங்களாக புனரமைப்பு காரணமாக பாலத்தை பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டு, கடந்த அக். 26ஆம் தேதிதான் மீண்டும் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், விபத்து ஏற்படுவதற்கு சில மணிநேரங்களுக்கு முன், அந்த பாலத்தில் சென்ற குடும்பத்தின் வாக்குமூலம் பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. அகமதாபாத் நகரைச் சேர்ந்த கோஸ்வாமி என்பவர் தனது குடும்பத்தினருடன் நேற்று மோர்பி தொங்கு பாலத்திற்கு சென்றுள்ளார்.

தீபாவளி பண்டிகை விடுமுறை என்பதால், அங்கு குடும்பத்துடன் சென்றுள்ளார். அப்போது, பாலத்தில் நூற்றுக்கணக்காணோர் சென்றுள்ளனர். மேலும், அவர்கள் பாலத்தின் பாதி வரை வந்தபோது, அங்கிருந்த இளைஞர்கள் சிலர் வேண்டுமென்றே, பாலத்தை பலமாக ஆட்டினர். அந்த செயல் எங்களுக்கு ஆபத்து விளைவிக்கும் என்று தோன்றியதால், நாங்கள் பாலத்தை கடக்காமல், மீண்டும் திரும்பிவிட்டோம். 

அப்போதே, அங்கிருந்த பணியாளர்களிடம் இளைஞர்களின் ஆபத்தான செயல் குறித்து புகார் தெரிவித்தேன். ஆனால், அவர்கள் டிக்கெட் கொடுப்பதில்தான் கவனமாக இருந்தார்கள். கூட்டத்தை கட்டுப்படுத்த தங்களால் இயலாது என்றும் கூறினர். 

பின்னர், நாங்கள் சென்று சிலமணிநேரங்களில் எங்களின் பயம் நிஜமாகிவிட்டது. மோர்பி பாலம் இடிந்துவிழுந்துள்ளது” என்றார். இதற்கு ஆதரமளிக்கும் வகையில், மோர்பி பாலத்தில் சென்றுகொண்டிருக்கும் சில இளைஞர்கள் வேண்டுமென்ற பாலத்தை மிதிப்பது, பாலத்தை குழுங்க வைப்பது என ஆபத்தான செயல்களில் ஈடுபடும் வீடியோ ஒன்று வைரலானது. 

அந்த வீடியோ, விபத்திற்கு சில மணிநேரங்களுக்கு முன் எடுக்கப்பட்டது என்று கூறப்பட்ட நிலையில், அது பழைய வீடியோ என தற்போது தெரிய வந்துள்ளது. சுமார் 10 மாதங்களுக்கு முன்னரே அந்த வீடியோ ட்விட்டரில் பதிவிடப்பட்டுள்ளது ஆதாரப்பூர்வமாக தெரியவந்தது.

எனினும், கோஸ்வாமி குடும்பத்தினர் கூறியதுபோன்று, இளைஞர்கள் சிலரின் ஆபத்தான செயலும் இந்த விபத்துக்கு காரணமாக அமைந்திருக்கலாம். ஆனால், அந்த வீடியோவிற்கும் விபத்துக்கும் தொடர்பில்லை என்பது தெளிவாகியுள்ளது. 

மோர்பி தொங்கு பாலத்தை அரசு ஒப்பந்ததின் பேரில் தனியார் நிறுவனம் ஒன்று புனரமைத்துள்ளது. ஆனால், புனரமைப்புக்கு பின்னான தர சான்றிதழ் எதையும் அந்நிறுவனம் அரசிடம் சமர்பிக்கவில்லை என்றும், அரசிடம் முறையான அனுமதி பெறாமல் மீண்டும் பாலம் திறக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.