குஜராத்தில் கேபிள் பாலம் அறுந்து ஆற்றில் விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 100ஐ தாண்டி உள்ளது.
குஜராத் மாநிலம் மோர்பி பகுதியில் உள்ள கேபிள் பாலம் சுமார் 150 ஆண்டுகள் பழமையானது ஆகும். பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட இந்த பாலம் 230 மீட்டர் நீளம் கொண்டது ஆகும். சாத் பூஜாவை முன்னிட்டு நேற்று அந்த பாலத்திற்கு 500க்கும் அதிகமானோர் வந்திருந்த நிலையில், மாலை 6.42 மணியளவில் பாலம் திடீரென அறுந்து ஆற்றுக்குள் விழுந்தது. அப்போது பாலத்தில் இருந்த 350க்கும் மேற்பட்டோர் தண்ணீரில் மூழ்கி உள்ளனர். இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 100ஐ தாண்டி உள்ளது. 177 பேர் இதுவரை உயிருடன் மீட்கப்பட்டு உள்ளனர். தண்ணீருக்குள் 100க்கும் மேற்பட்டவர்கள் சிக்கி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. உயிரிழந்தவர்களில் பலர் பெண்கள், குழந்தைகள் ஆவர். விடியவிடிய மீட்புப் பணிகள் நடந்து வந்த நிலையில், அதிகாலையில் தேசிய பேரிடர் மீட்பு படையில் இருந்து கூடுதல் வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மீட்புப் பணிகளை செய்து வருகின்றனர்.
7 மாதங்களாக மூடப்பட்டிருந்த இந்த பாலம் புனரமைக்கப்பட்டு வந்தது. கடந்த அக்டோபர் 26ஆம் தேதிதான் இந்த பாலம் மீண்டும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. இந்த பாலத்தில் செல்வதற்கு கட்டணம் 17 ரூபாயாக விதிக்கப்பட்டு இருந்தது. ‘ஓரேவா’ என்ற தனியார் நிறுவனம் அரசு ஒப்பந்தம் மூலம் இந்த புனரமைப்பு பணிகளை செய்துள்ளது. ஆனால் கட்டிட உறுதி சான்று வாங்காமல் பாலம் திறக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. குஜராத் மாநிலத்தை உலுக்கியுள்ள இந்த விபத்து தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 500க்கும் மேற்பட்டோர் பாலத்தில் சென்றதுதான் பாலம் இடிந்து விழக் காரணம் என்று கூறப்படுகிறது.
இந்த விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.4 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் மாநில அரசால் வழங்கப்படுகிறது. விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதையும் படிக்கலாமே: புதிய இந்தியாவின் சாதனைகள் – குஜராத் கூட்டத்தில் பட்டியலிட்ட பிரதமர் மோடி!
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM