சென்னை: எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக் கான பொதுப் பிரிவு கலந்தாய்வில் தற்காலிக இட ஒதுக்கீட்டு ஆணை பெற்ற 7,036 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு 13 ஆவணங்களைச் சமர்ப்பிக்குமாறு மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
மருத்துவக் கல்வி இயக்ககம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், “எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ஆன்லைனில் நடந்த பொதுப் பிரிவு கலந்தாய்வில் தற்காலிக இட ஒதுக்கீட்டு ஆணைபெற்றவர்களுக்குச் சான்றிதழ் சரிபார்க்கும் பணி நடைபெறவுள்ளது. தற்காலிக இட ஒதுக்கீட்டு ஆணை, நீட் தேர்வு அனுமதி அட்டை, நீட் மதிப்பெண் அட்டை, 10, 11, 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள், மாற்றுச்சான்றிதழ், சாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் (தகுதியானவர்கள் மட்டும்),தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் தகுதிச் சான்றிதழ் (தகுதியானவர்கள் மட்டும்), ஆதார் அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் (10) ஆகிய 13 ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்த பின்னர், இறுதி இட ஒதுக்கீட்டு ஆணை பெறுபவர்களின் விவரங்கள் சுகாதாரத் துறை இணையதளத்தில் வெளியிடப்படும். முதல் சுற்றுகலந்தாய்வில் இட ஒதுக்கீட்டு ஆணை பெற்றவர்கள் நவம்பர் 4-க்குள் கல்லூரிகளில் சேர வேண்டும். அப்போது, அசல் மற்றும் சான்றிதழ்களின் நகல்களைக் கல்லூரிகளில் சமர்ப்பிக்க வேண்டும் என்று மருத்துவக் கல்வி இயக்கக அதிகாரிகள் தெரிவித்தனர்.