சென்னை: “குஜராத் மாநிலம் மோர்பியில் கேபிள் பாலம் அறுந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் பல அப்பாவி உயிர்கள் பறிபோயிருப்பதை அறிந்து மிகவும் வேதனையடைந்தேன். உற்றாரை இழந்து தவிக்கும் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,”குஜராத் மாநிலம் மோர்பியில் கேபிள் பாலம் அறுந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் பல அப்பாவி உயிர்கள் பறிபோயிருப்பதை அறிந்து மிகவும் வேதனையடைந்தேன். உற்றாரை இழந்து தவிக்கும் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
விபத்தில் காயமடைந்தவர்கள் விரைந்து நலம்பெற விழையும் அதேவேளையில், ஆற்றில் சிக்கி உயிருக்குப் போராடி வரும் எஞ்சியோர் விரைந்து பாதுகாப்பாக மீட்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
குஜராத்தின் மோர்பி நகரில் மச்சூ நதி பாய்கிறது. இந்த நதியின் குறுக்கே 233 மீட்டர் நீளம், 4.6 அடி அகலத்தில் கேபிள் நடைபாலம் அமைக்கப்பட்டிருந்தது. சுமார் 140 ஆண்டுகளுக்கு முன், மரம், கேபிள்கள் மூலம் கட்டப்பட்ட இந்தப் பாலத்தில் ரூ.2 கோடியில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கடந்த தீபாவளியன்று மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது. சுற்றுலாத் தலமான இங்கு நேற்று 500-க்கும் மேற்பட்டோர் திரண்டிருந்தனர்.
எதிர்பாராதவிதமாக பாலம் உடைந்து விழுந்ததில், அனைவரும் ஆற்றில் விழுந்தனர். இன்று (அக் 31) காலை 8.30 மணி நிலவரப்படி 132 பேர் உயிரிழந்துள்ளனர் என்று குஜராத் தகவல் தொடர்புத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. ராணுவம், கடற்படை, விமானப்படை, தேசிய பேரிடர் மீட்புப்படை மற்றும் தீயணைப்புப் படை ஆகியவை தொடர்ந்து தேடுதல் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. மோர்பி சட்டமன்ற உறுப்பினர் ப்ரிஜேஷ் மெஹ்ரா பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம் என்று அச்சம் தெரிவித்துள்ளார்.