இந்தியாவையே உலுக்கியுள்ள குஜராத் மோர்பி தொங்கு பாலம் அறுந்து விழுந்த விபத்தின் சிசிடிவி வீடியோ வெளியாகியுள்ளது.
கடந்த 19-ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயா் ஆட்சிக் காலத்தின்போது குஜராத் மாநிலத் தலைநகர் காந்தி நகருக்கு மேற்கே 240 கிமீ தொலைவில் உள்ள மோர்பி நகரில் உள்ள மச்சு நதி மீது 230 மீட்டா் நீள தொங்கு பாலம் அமைக்கப்பட்டது.
பொதுமக்கள் சுற்றுலா வரும் முக்கிய இடமாக இந்தப் பாலம் திகழ்கிறது.
கடந்த 6 மாதங்களாக அந்தப் பாலத்தில் தனியாா் நிறுவனம் புனரமைப்புப் பணிகளை மேற்கொண்டு வந்தது. இதையொட்டி மூடப்பட்டிருந்த அந்தப் பாலம், புனரமைப்புப் பணிகள் முடிந்து கடந்த 26ஆம் திகதி குஜராத்தி புத்தாண்டன்று மீண்டும் திறக்கப்பட்டது.
அந்தப் பாலத்தில் ஞாயிற்றுக்கிழமை மக்கள் கூட்டம் அலைமோதியது. தீபாவளி பண்டிகை மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதால் திரளானோா் பாலத்துக்கு வந்திருந்தனா். அப்போது பொதுமக்களின் எடையைத் தாங்க முடியாமல், அந்தப் பாலம் மாலை 6.30 மணியளவில் அறுந்து விபத்து ஏற்பட்டது.
CCTV footage of #MorbiBridgeCollapse pic.twitter.com/ahxGzkfgnM
— karthik gopinath (@karthikgnath) October 31, 2022
பாலத்தில் இருந்தவா்கள் நதியில் விழுந்தனா். தேசிய பேரிடா் மீட்புப் படையினா், தீயணைப்புத் துறையினா் சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனா்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 141ஆக அதிகரித்துள்ளது.
60 பேர் இன்னும் காணவில்லை. பாலத்தில் தொங்கிக் கொண்டிருந்த சுமார் 5-10 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குஜராத் மோர்பி தொங்கு பாலம் அறுந்து விழுந்த கோர விபத்தால் அதிர்ச்சியடைந்துள்ளோம். இந்த கோர விபத்துக்கு குஜராத் அரசு முழு பொறுப்பேற்தாக அம்மாநில அமைச்சர் பிரஜேஷ் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் பாலம் அறுந்து விழுந்த பதறவைக்கும் சிசிடிவி வீடியோ வெளியாகியுள்ளது.
பாலம் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட மக்களால் நிரம்பி வழிவதை வீடியோ காட்டுகிறது.
திடீரென்று, அது ஊசலாடியது, பின்னர் நொறுங்கியது, சில நொடிகளில் கீழே உள்ள தண்ணீரில் பாலம் மூழ்கியது. பாலத்தின் சில பகுதிகள் தண்ணீரில் இருப்பது வீடியோவில் தெரிகிறது.