குஜராத் மாநிலம் மோர்பியில் மச்சு ஆற்றின் மீது கட்டப்பட்டிருந்த தொங்கும் பாலம் உடைந்து விபத்திற்குள்ளான சம்பவம், நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலில் 60 பேர் பலியானதாக கூறப்பட்ட நிலையில், படிப்படியாக 100ஐ தாண்டியது. தற்போது 132 பேர் பலியானதாக மாநில உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்வி அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். இந்த விபத்து நேற்று நிகழ்ந்த போது நேரம் மாலை 6.40. நன்றாக இருள் சூழ்ந்திருந்தது. இத்தகைய சூழலில் விபத்து ஏற்பட்டதும் அப்பகுதி மக்களுக்கு தான் முதலில் தகவல் தெரிந்தது.
உடனே ஓடிவந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். நீச்சல் தெரிந்தவர்கள் மச்சு ஆற்றில் குதித்து முடிந்தவரை தத்தளித்தவர்களை மீட்டுக் கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லவும் உதவியிருக்கின்றனர். இதில் கர்ப்பிணிகளும், கைக்குழந்தை உடன் நின்றவர்களும், பெண்களும், முதியவர்களும் எனப் பலர் இருந்தனர்.
இந்நிலையில் சம்பவம் குறித்து பேசிய டீ விற்கும் நபர் ஒருவர், எல்லாம் சில விநாடிகளில் நடந்து முடிந்துவிட்டது. நான் நேரில் பார்த்தேன். மக்கள் பாலத்தை பிடித்து தொங்கி கொண்டிருந்தனர். அதன்பிறகு நழுவி ஆற்றில் விழுந்து விட்டனர். இதை பார்த்த போது நெஞ்சை பதறவைத்து விட்டது. 7 மாத கர்ப்பிணி பெண் ஒருவர் ஆற்றில் விழுந்தது மிகவும் கஷ்டமாக இருந்தது.
என்னை அப்படியே போட்டு உலுக்கி போட்டு விட்டது. நான் ஒவ்வொரு ஞாயிறு அன்றும் மோர்பி பாலத்தின் அருகே தான் டீ விற்க வருவேன். இப்படியொரு துயரத்தை இதுவரை நான் பார்த்ததே இல்லை. என்னால் முடிந்தவரை உதவிகள் செய்தேன். சிலரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தேன். சிறிய குழந்தை ஒன்றை காப்பாற்றினோம். அது கொஞ்சம் ஆறுதலாக இருந்தது.
அவரை அவசர அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். ஆனால் செல்லும் வழியிலேயே குழந்தையின் உயிர் பிரிந்தது. அப்படியே என் கண்களில் கண்ணீர் தாரை தாரையாக கொட்டியது எனக் கூறினார். அதே பகுதியை சேர்ந்த ஹசினா பென் என்ற பெண் கூறுகையில், என் வாழ்க்கையில் இப்படியொரு சம்பவத்தை நான் பார்த்ததே இல்லை.
நானும், எனது குடும்பத்தினரும் முடிந்தவரை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டோம். எங்கள் வாகனத்தை கொடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்ல உதவினோம். ஆற்றில் இருந்து உயிரிழந்த குழந்தை ஒன்றை தூக்கிய போது அப்படியே உலுக்கி எடுத்துவிட்டது. இருப்பினும் மருத்துவமனைக்கு எடுத்துக் கொண்டு ஓடினோம். ஆனால் எந்தவித பலனும் இல்லை.
என்னை சுக்கு நூறாக்கிவிட்டது என்று கூறினார். மேலும் சிலர் கூறுகையில், குழந்தைகள் உட்பட பலர் பாலத்தில் தொங்கி கொண்டிருந்ததை பார்த்தேன். ஆனால் அவர்களுக்கு உதவி செய்ய முடியவில்லை. அதன்பிறகு ஆற்றில் விழுந்து அடித்து செல்லப்பட்டனர். சிலர் எஞ்சியிருந்த பாலத்தை பிடித்துக் கொண்டு மேலே வர முயற்சித்தனர். மிகவும் கஷ்டமான நிகழ்வாக இருந்ததாக தெரிவித்தனர்.