ட்விட்டர் ப்ளூ டிக்கிற்கு இனி கட்டணம் வசூல்: எலான் மஸ்க் முடிவு என்ன?

உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் ஆவார். விண்வெளி ஆராய்ச்சி, வாகன உற்பத்தி, சூரியசக்தி மின்கலன் தயாரிப்பு, செயற்கை நுண்ணறிவு, சுரங்க வடிவமைப்பு என்பன உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் கால்பதித்து சாதித்தவர். தடாலடியான முடிவுகள், நினைத்துப் பார்க்கவே முடியாத விஷயங்களை முடித்துக் காட்டும் திறமை உள்ளிட்டவற்றுக்கு சொந்தக்காரரான எலான் மஸ்க், சமூக வலைதளமான ட்விட்டர் நிறுவனத்தின் பெருவாரியான பங்குகளை விலைக்கு வாங்கி தன் வசமாக்கினார்.

இதையடுத்து, 44 பில்லியன் டாலருக்கு ட்விட்டரை விலைக்கு வாங்க போவதாக கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்தார், அதன்பின்னர், தனது முடிவில் இருந்து பின்வாங்கினார். ஆனால், ட்விட்டர் நிறுவனம் நீதிமன்றத்தை நாடியது. தொடர்ந்து, ட்விட்டரை விலைக்கு வாங்கிக் கொள்வதாக அறிவித்த அவர், அதற்கான காலக்கெடுவுக்குள் பணத்தை செலுத்தி ட்விட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கியுள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தின் பயோவில் ‘Chief Twit’ எனவும் அவர் பதிவிட்டுள்ளார். ட்விட்டர் அலுவலகத்துக்கு கை கழுவும் சின்க் உடன் சென்ற அவர் அந்த வீடியோவை தனது ட்விட்டர் பகக்த்திலும் பகிர்ந்திருந்தார். அதற்கு Let that sink in என்று அவர் வைத்திருந்த தலைப்பு பல்வேறு விவாதங்களையும் விமர்சனங்களையும் ஏற்படுத்தியது.

இதனிடையே, ட்விட்டர் நிறுவனத்தின் சிஇஓ பராக் அகர்வால், தலைமை நிதி அதிகாரி நெட் சேகல், சட்டத்துறை தலைவர் விஜயா கட்டே உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள் உள்பட ட்விட்டர் ஊழியர்கள் 75 சதவீதம் பேரை எலான் மஸ்க் நீக்கப்போவதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால், ட்விட்டர் தரப்பு அந்த தகவலை இதுவரை உறுதி செய்யவும் இல்லை; மறுக்கவும் இல்லை. ட்விட்டர் நிறுவனம் எலான் மஸ்க் கைக்கு வரவிருப்பதாக தகவல் வெளியானதில் இருந்தே, அச்சத்தில் ஊழியர்கள் பலர் ராஜினாமா செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

ஒரேவொரு ட்வீட்… பத்திக்கிட்டு எரியும் ட்விட்டர்- இனி எல்லாம் எலான் மாஸ்க் கையில்!

அதேசமயம், ட்விட்டர் தன் வசமானதும் அதில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வரப்போவதாகவும் எலான் மஸ்க் ஏற்கனவே தெரிவித்திருந்தார். அந்த வகையில், ட்விட்டரின் அதிகாரப்பூர்வ கணக்கு என்பதற்கான ப்ளூ டிக்கிற்கு இனி கட்டணம் வசூல் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ட்விட்டரில் சுயவிவரப் பெயருக்கு அடுத்ததாக நீல நிற டிக் ஒன்று இருக்கும். அதிகாரப்பூர்வ கணக்கு என்பதை குறிக்கும் இந்த மதிப்புமிக்க ப்ளூ டிக், அதிகமான பின்தொடர்பவர்கள் இருந்தபோதிலும் தனக்கு மறுக்கப்படுவதாக ட்விட்டரில் ஒருவர் குற்றம் சாட்டியிருந்தார். அதற்கு பதிலளித்த எலான் மஸ்க், ப்ளூ டிக் தளத்தில் சரிபார்ப்பு செயல்முறை புதுப்பிக்கப்பட்டு வருவதாக கூறியுள்ளார்.

பிரபலங்களின் அதிகாரபூர்வ கணக்குகளுக்கு மட்டுமே அளிக்கப்பட்டுவந்த நீல நிற டிக் அங்கீகாரத்தைத் தனிநபர்களால் இயக்கப்படும் அனைத்து ட்விட்டர் கணக்குகளுக்கும் அளிப்பது என்பதும் எலான் மஸ்க் கொண்டு வர விரும்பும் மாற்றங்களில் ஒன்று என்பது கவனிக்கத்தக்கது.

ட்விட்டர் கணக்குகளின் புதிய சரிபார்ப்பு செயல்முறை பற்றிய அதிகாரப்பூர்வ விவரங்கள் தெளிவாக இல்லை என்றாலும் நிறுவனம் விரைவில் ப்ளூ டிக்கிற்கு பயனர்களிடம் கட்டணம் வசூலிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, ப்ளூ டிக் வசதி பெற விரும்புபவர்கள் இனி ரூ.1,600 கட்டணமாக செலுத்த வேண்டியிருக்கும் என தெரிகிறது. அதாவது, ட்விட்டர் ப்ளூ உறுப்பினர்களுக்கு மட்டுமே நீல நிற டிக் அம்சம் வழங்கப்படும் எனவும், ட்விட்டரில் சந்தா செலுத்தும் புதிய முறையின்படி, ட்வீட்களைத் எடிட் செய்யும் கூடுதல் அம்சங்கள் கொண்டு வரப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே சரிபார்க்கப்பட்ட பயனர்கள் தங்கள் சுயவிவரத்தில் ப்ளூ டிக்கை அப்படியே வைத்திருக்கும் பொருட்டு Twitter Blue சந்தாவுக்கு மாற 90 நாட்கள் அவகாசம் வழங்கப்படும் எனவும் தெரிகிறது. சரிபார்ப்பு செயல்முறையை மாற்ற ட்விட்டர் விதிகளில் மாற்றம் கொண்டு வரப்படுமா என்பது தெளிவாக தெரியவில்லை. இருந்தபோதும், ‘ட்விட்டர் உள்ளடக்க மதிப்பாய்வுக் கொள்கைகளில் நாங்கள் இன்னும் எந்த மாற்றத்தையும் செய்யவில்லை.’ என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.