டிஜிட்டல் ரிலீசுக்கு தயாரான மோகன்லாலின் ஸ்படிகம்
தமிழ் திரையுலகில் ரஜினிகாந்த் நடித்த சூப்பர்ஹிட் படங்களான சிவாஜி, பாட்ஷா ஆகிய படங்களை இந்த கால இளைஞர்களும் ரசிக்கும் விதமாக டிஜிட்டலுக்கு மாற்றி ரிலீஸ் செய்தார்கள். அந்த படங்கள் மீண்டும் பெரிய வரவேற்பை பெற்றன. அதுமட்டுமல்ல எம்ஜிஆர் நடித்த ரிக்சாக்காரன், சிவாஜி நடித்த கர்ணன் ஆகிய படங்களும் டிஜிட்டலில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றன. அந்தவகையில் தற்போது மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 25 வருடங்களுக்கு முன்பு வெளியான ஸ்படிகம் திரைப்படத்தையும் தற்போது டிஜிட்டலுக்கு மாற்றும் பணி நடைபெற்று வந்தது. இந்த நிலையில் அந்த பணிகள் நிறைவடைந்து விட்டதாக படத்தை இயக்கிய இயக்குனர் பத்ரன் தெரிவித்துள்ளார்.
மலையாள ரசிகர்களின் மனம் கவர்ந்த எவர்கிரீன் படங்களை வகைப்படுத்தினால் அதில் மோகன்லாலின் 'ஸ்படிகம்' கட்டாயம் இடம்பெறும். அந்தப்படத்தில் மோகன்லால் தனது வேட்டியை கழட்டி எதிரிகளை அட்டாக் பண்ணும் காட்சியும், தனது லாரியில் இருந்து ஸ்டைலாக குதித்து மாஸ் காட்டும் காட்சியும் ரொம்பவே பிரசித்தம். தமிழில் இந்தப்படம் சுந்தர்.சி நடிப்பில் வீராப்பு என்கிற பெயரில் ரீமேக்கானது.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு தனது மகளுக்கு திருமணம் நடத்திய இந்தப்படத்தின் இயக்குனர் பத்ரன் ஸ்படிகம் திரைப்படத்தைப் போலவே மணமக்களை லாரியில் ஊர்வலமாக அழைத்து வந்து ஆச்சரியப்படுத்தினார். அதுமட்டுமல்ல இந்த படத்தின் 24வது வருட விழாவில் பேசும்போது நிச்சயம் ஸ்படிகம் திரைப்படத்தை டிஜிட்டலில் மாற்றி இந்தக் கால இளைஞர்கள் பார்க்கும் விதமாக பிரமாண்டமாக ரிலீஸ் செய்பவன் என்றும் அவர் கூறியிருந்தார். சொன்னதுபோலவே தற்போது படத்தின் பணிகளை முடித்தும் விட்டார். இந்த படம் விரைவில் உலக அளவில் ரிலீஸ் ஆகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.