கேபிள் பாலம் அறுந்து விழுந்து விபத்து; குஜராத் பலி 146 ஆனது: ஆற்றில் விடிய விடிய தேடியதில் குழந்தைகள் உட்பட 177 பேர் மீட்பு

மோர்பி: குஜராத்தில் கேபிள் பாலம் அறுந்து விழுந்த விபத்தில் பலி எண்ணிக்கை 146 ஆக அதிகரித்துள்ள நிலையில், 177 பேர் மீட்கப்பட்டனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக 3 பிரிவுகளில் போலீசார் வழக்குபதிந்த நிலையில், 5 பேர் கொண்ட உயர்மட்ட குழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலம் மோர்பி நகரில் மச்சு ஆற்றின் குறுக்கே 150 ஆண்டுகள் பழமையான கேபிள் பாலம் சிதிலம் அடைந்து இருந்ததால் கடந்த சில மாதங்களுக்கு முன் சீரமைக்கப்பட்டது. குஜராத்தி புத்தாண்டு தினமான கடந்த 26ம் தேதி இந்த பாலம் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது.

விடுமுறை நாளான நேற்று மாலை 6.30 மணி அளவில் 400க்கும் மேற்பட்ட உள்ளூர் மக்களும், சுற்றுலா பயணிகளும் அந்த பாலத்திற்கு சென்று இயற்கை அழகை ரசித்துக் கொண்டிருந்தனர். அப்போது ஏராளமானோர் பாலத்தின் மீது குவிந்தனர். அவர்களின் எடையை தாங்க முடியாமல், பாலம் திடீரென அறுந்து விழுந்ததால் அதிலிருந்த அனைவரும் ஆற்றுக்குள் விழுந்தனர். பலர் நீரில் மூழ்கினர். பலர் நீந்தி தப்பிக்க முயன்றனர்.

குழந்தைகளும், பெண்களும், வயதானவர்களும் தப்பிக்க வழியின்றி நீரில் மூழ்கினர். இரவு நேரத்தில் நடந்த விபத்து என்பதால் ஆற்றில் விழுந்தவர்களை மீட்க முடியாத நிலை ஏற்பட்டது. தகவலறிந்த தேசிய பேரிடர் மீட்புப்படை வீரர்களும், மாநில பேரிடர் மீட்புப்படையினரும் நேற்றிரவு முதல் இன்று காலை வரை 177 பேரை மீட்டனர். 19 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்றிரவு நிலவரப்படி 60 பேர் பலியானதாக கூறப்பட்ட நிலையில், இன்று காலை நிலவரப்படி பலி எண்ணிக்கை 146 ஆக அதிகரித்துள்ளது. 20 மீட்புப் படகுகளுடன் போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. 100க்கும் மேற்பட்டோரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த பாலத்தின் பராமரிப்பை தனியார் நிறுவனம் மேற்கொண்டு வருவதால், அந்த நிர்வாகத்திற்கு எதிராக ஐபிசியின் 304, 308 மற்றும் 114 பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி நேற்று குஜராத்தில் அரசின் நலத்திட்ட விழாவில் பங்கேற்றிருந்த நிலையில் இந்த விபத்து நடந்துள்ளது. அவர் குஜராத் மாநில முதல்வர் பூபேந்திர படேலை தொடர்பு கொண்டு, மீட்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த உத்தரவிட்டார். விபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார். அதேபோல் பலியானோர் குடும்பங்களுக்கு குஜராத் அரசு சார்பில் தலா ரூ.4 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் பூபேந்திர படேல் கூறினார்.

மேலும், குஜராத் நகராட்சி ஆணையர் ராஜ்குமார்  பெனிவால் தலைமையில், தரக் கட்டுப்பாட்டு பிரிவு தலைமைப் பொறியாளர், எல்டி  பொறியியல் கல்லூரி நிபுணர், சாலை மற்றும் கட்டிடம் பராமரிப்பு பணி  செயலாளர், சிஐடி குற்றப்பிரிவு போலீஸ் ஐஜி கொண்ட 5 ேபர் குழுவின்  விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அவர்கள் விபத்து நடந்த பகுதிக்கு சென்று  விசாரணையை தொடங்கியுள்ளனர்.

டிக்கெட் வசூலில் குறி: ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட மோர்பி பாலம், ரிஷிகேஷில் உள்ள ராம்-ஜூலா மற்றும் லக்ஷ்மன் ஜூலா பாலம் போன்று இருக்கும். புதுப்பிக்கப்பட்ட நிலையில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு தான் திறக்கப்பட்டது. ஆனால் பாலத்தின் உறுதித் தன்மை பற்றி பல கேள்விகள் எழுகின்றன. உரிய தகுதிச் சான்றிதழ் பெறாமல் பாலம் கட்டப்பட்டதாகவும், சீரமைப்பு முடிந்த பின்னரும் எவ்வித அனுமதியும் பெறாமல் திறக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும் பாலத்தை பார்வையிட வருபவர்களிடம் ரூ.17 டிக்கெட் வசூலிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு ரூ.12 டிக்கெட் கட்டாயமாக்கப்பட்டது. டிக்கெட் வசூலில் குறியாக இருந்த தனியார் நிறுவனம் மற்றும் ஆளும் பாஜக அரசு, மக்களின் உயிரில் அக்கறை ெசலுத்தவில்லை என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி உள்ளது.

மோடியின் பேரணி ரத்து: குஜராத் மாநிலத்தில் சட்டப் பேரவை தேர்தல் அறிவிப்பு இன்னும் சில நாட்களில் அறவிக்கப்பட உள்ள நிலையில், பிரதமர் மோடி குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலத்திற்கு மூன்று நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தற்போது குஜராத்தில் தங்கியுள்ள பிரதமர் மோடி, மோர்பி விபத்து சம்பவத்தால் கடும் அதிர்ச்சியடைந்துள்ளார். அதனால், அகமதாபாத்தில் ஏற்கனவே திட்டமிடப்பட்ட தனது இன்றைய சாலைப் பேரணி திட்டத்தை ரத்து செய்தார். இருப்பினும், ரூ.2,900 கோடி மதிப்பிலான ரயில்வே திட்டங்களை தொடங்கி வைக்கிறார். மற்றபடி பாஜக கட்சி சார்ந்த நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கவில்லை என்று பாஜக மாநில ஊடக ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.

நீர் புகாத கேமரா: மோர்பி பால விபத்தில் சிக்கியவர்களை மீட்க ராணுவம், கடற்படை, விமானப்படை, தீயணைப்புப் படை, தேசிய மற்றும் மாநில பேரிடர் குழுக்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன. இவர்களுடன் தொழில்நுட்ப குழுக்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றன. ஆற்றின் சேற்றில் அல்லது வேறு எங்கேனும் மக்களின் உடல்கள் சிக்கியுள்ளதா? என்பதை நீர் புகாத கேமரா மூலம் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இது தவிர ஆற்றில் இருந்து தண்ணீரை வெளியேற்றும் பணியும் நடந்து வருகிறது.

நகராட்சி அதிகாரி பேட்டி: மோர்பி  நகராட்சியின் தலைமை அதிகாரி சந்தீப்சிங் ஜாலா கூறுகையில், ‘ஓரேவா என்ற  தனியார் நிறுவனத்திடம் 15 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் மோர்பி பாலம்  ஒப்படைக்கப்பட்டது. இந்த ஆண்டு மார்ச் மாதம், பாலத்தை சீரமைக்க வேண்டி  இருந்ததால் பாலம் மூடப்பட்டது. பாலத்தின் பணிகள் முடிவுற்ற நிலையில்  குஜராத்தி புத்தாண்டு (அக். 26) அன்று மீண்டும் திறக்கப்பட்டது. அன்று  முதல் பொதுமக்கள் பாலத்தை பார்வையிட்டு வந்தனர். தீபாவளி விடுமுறை நாட்கள்  என்பதால், ஒரே நேரத்தில் அதிகளவிலான மக்கள் பாலத்திற்கு சென்றுள்ளனர்.  இருப்பினும், சீரமைக்கப்பட்ட பாலத்தின் உறுதித் தன்மை தொடர்பான தரச்  சான்றிதழை சம்பந்தப்பட்ட நிறுவனம் நகராட்சி நிர்வாகத்திடம் இருந்து  பெறவில்லை. விபத்து சம்பவத்தை தொடர்ந்து, பாலத்தின் சீரமைப்பு தொடர்பான  ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன’ என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.