ட்விட்டரின் புதிய உரிமையாளராக எலான் மஸ்க் பொறுப்பேற்றுள்ள நிலையில், அதில் பயனர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்தும் ‘ப்ளூ டிக்’ வசதிக்கு இனி கட்டணம் வசூலிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஏப்ரல் இறுதியில் சமூக வலைதள நிறுவனமான ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கி இருந்தார். இருந்தாலும் இரு தரப்புக்குமான டீல் இழுபறியாக இருந்து வந்தது. இது தொடர்பாக நீதிமன்றம் வரை பஞ்சாயத்து சென்ற நிலையில, ஒருவழியாக ட்விட்டர் இப்போது மஸ்க் வசம் ஆகியுள்ளது. இந்த நிலையில், அந்நிறுவனத்தின் உரிமையாளர் என்ற முறையில் பல்வேறு மறுசீரமைப்பு பணிகளை மஸ்க் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், ட்விட்டரில் வார்த்தைகள் பயன்படுத்தப்படும் எண்ணிக்கையை அதிகப்படுத்த ஆலோசித்து வரும் வேளையில், பயனர்களின் அடையாளங்களை உறுதிப்படுத்தும் ப்ளூ டிக் முறைக்கு கட்டணம் வசூலிக்கும் வழிமுறை குறித்து ஆராயுமாறு தனது ஊழியர்களுக்கு எலான் மஸ்க் தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பயனர்களின் உண்மை அடையாளத்தை உறுதிபடுத்துவதற்கு பயன்படுத்தப்படும் ப்ளூ டிக் முறைக்கு இனி மாதம் 4.99 அமெரிக்க டாலர் கட்டணம் செலுத்த வேண்டும். அது தவறும் பட்சத்தில் அவர்கள் ப்ளூ டிக் அடையாளத்தை இழக்க நேரிடும் என்று இதுகுறித்து வெளியான அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது. ஆனால், டெல்ஸா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை என்றும், இந்தத் திட்டம் கைவிடப்படலாம் என்றும் கூறப்படுகிறது. எனினும் அடையாளம் சரிபார்ப்பு என்பது இனி ட்விட்டர் ப்ளூவின் ஓர் அங்கமாக மாற்றப்படலாம் என்று தொழில்நுட்ப செய்திகளை வழங்கும் ப்ளாட்ஃபார்மர் தெரிவித்துள்ளது.
ட்விட்டர் ப்ளூ டிக் என்பது கடந்த ஆண்டு ஜூன் மாதம் ட்விட்டரில் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் சந்தா செலுத்தும் வசதியாகும். இந்த மாதாந்திர கட்டண வசதி, ட்வீட்களை எடிட் செய்யும் வசதியை உள்ளடக்கிய ப்ரீமியம் வசதிகளை பயன்படுத்த வழிசெய்கிறது.
எலான் மஸ்கின் வலுயுறுத்தலின் பெயரில் கடந்த ஏப்ரல் மாதம் ட்வீட்களை எடிட் செய்யும் வசதி வேண்டுமா என வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 70 சதவீதம் பேர் ‘ஆம்’ என வாக்களித்திருந்தனர். இந்த நிலையில், ட்வீட்களை எடிட் செய்யும் வசதி கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.