ரியோ: பிரேசில் அதிபர் தேர்தலில் இடதுசாரி தலைவரான லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா வெற்றி பெற்றிருக்கிறார். இதன்மூலம் பெரிதும் விமர்சிக்கப்பட்டு வந்த வலதுசாரி தலைவர் ஜெயிர் போல்சோனாரோவின் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.
யூனியன் தலைவராக இருந்த லுலா டா சில்வா பிரேசிலின் அதிபராக 2003 மற்றும் 2010-ஆம் ஆண்டுகளில் பதவி வகித்தவர். இந்த நிலையில், 2022-ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் போல்சோனாரோவை வெற்றிகொண்டு மூன்றாவது முறையாக தற்போது லுலா டா சில்வா அதிபராகிறார். அதிபர் தேர்தலில் அவருக்கு 50.9% வாக்குகள் கிடைத்தன. போல்சோனாரோவுக்கு 49.1% வாக்குகள் கிடைத்தன.
பிரேசிலில் ’வறுமையை ஒழிப்பேன்’ என்ற தீவிர பிரச்சாரத்தின் விளைவாக இந்த வெற்றியை லுலா டா சில்வா பெற்றிருக்கிறார். மாறாக, போல்சோனாரா ’கடவுள் குடும்பம் நாடு’ என்ற பிரச்சாரத்தை முன்வைத்து தோல்வி அடைந்திருக்கிறார். வெற்றி பெற்ற லுலா டாவுக்கு உலகத் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
பிரதமர் மோடி வாழ்த்து: பிரதமர் மோடி தனது வாழ்த்துச் செய்தியில், “பிரேசில் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள லுலாவுக்கு எனது வாழ்த்துகள். இருதரப்பு உறவுகளையும் மேலும் வலுப்படுத்தவும், விரிவுப்படுத்தவும், உலகளாவிய பிரச்சினைகளின்போது இருதரப்பும் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தவும், இணைந்து பணியாற்றவும் நான் விரும்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
விமர்சனத்துக்குள்ளான போல்சோனாரோ: அதிபர் தேர்தலில் தோல்வியுற்ற போல்சோனாரோ தனது ஆட்சியில் கடுமையான விமர்சனங்களை சந்தித்தார். கருக்கலைப்பு, எல்ஜிபிடிக்யூ ஆகியவற்றுக்கு எதிரான அவரது கருத்துகள் பொதுவெளியில் விமர்சனத்துக்கு உள்ளாகின. மேலும், கரோனா தடுப்பூசிக்கு எதிராகவும் அவர் பிரச்சாரம் செய்தார். அவரது பதவி காலத்தில் பிரேசிலின் பொருளாதாரம் வெகுவாக சரிந்தது. இதன் காரணமாக அவரது ஆட்சி மீது மக்களுக்கு கடும் அதிருப்தி நிலவியது. இந்த நிலையில், பிரேசில் அதிபர் தேர்தலில் மோசடி நடந்துள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். தென் அமெரிக்க நாடுகளில் தொடர்ந்து இடதுசாரி தலைவர்கள் வெற்றி பெற்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.