பட்டமளிப்பு விழா என்றால் சட்டென ஞாபகம் வருவது அந்தக் கருப்பு கோட்டும், தொப்பியும் தான். இந்தியா மட்டுமல்ல பெரும்பாலான நாடுகளிலும் இதுதான் வழக்கம். ஆனால் இந்த வழக்கத்திலிருந்து தள்ளி, சற்றே வித்தியாசமான முறையில் தங்களது பட்டமளிப்பு புகைப்படத்தை எடுத்து அசத்தியிருக்கிறார்கள் கனடாவைச் சேர்ந்த கடற்படை வீரருக்கான பயிற்சி பெற்ற மாணவர்கள்.
கடற்படையில் Clearance divers என்ற ஓர் தனிப்பிரிவு உண்டு. கடலுக்கு அடியில் நீந்திக் கப்பல்கள் செல்வதற்கும், துறைமுகங்கள் அமைப்பதற்கும் ஏதேனும் தடைகள் (பாறைகள்), இருப்பின் அதை வெடிவைத்து தகர்ப்பது, சரி செய்வது இவர்களின் தலையாய பணி.
முதன்முதலில் இரண்டாம் உலகப் போரில் கடலுக்கு அடியில் வைக்கப்பட்ட வெடிக்கப்படாத, குண்டுகளை எடுப்பதற்காக இத்தகைய பயிற்சிகள் வீரர்களுக்கு அளிக்கப்பட்டன. நாளடைவில் கடற்படையில் இது ஒரு தனிப் பிரிவாக மாறி ஒவ்வொரு வருடமும் இதற்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது. அந்த வகையில், கனடாவில் இந்த ஆண்டு, கிளியரன்ஸ் டைவர்ஸ் பயிற்சியை முடித்தவர்களுக்கான பட்டமளிப்பு விழா நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் அதற்கான புகைப்படம் சற்றே வித்தியாசமானதாக இருக்க வேண்டும் என அவர்கள் யோசித்தனர்.
நீண்ட யோசனைக்குப் பின் நீருக்கு அடியில் புகைப்படம் எடுக்கலாம், என முடிவு செய்து, ஒரு நீச்சல் குளத்தில் இறங்கி இரண்டு வரிசைகளாக, பயிற்சியாளரும், வீரர்களுமாக அணிவகுத்து, பின்புறத்தில் கனடாவின் கடற்படை கொடியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இதனை “ஃப்ளீட் டைவிங் யூனிட்- அட்லாண்டிக்” என்ற, முகநூல் பக்கத்திலும் புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளனர். இணையதளத்தில் அனைவரது கவனத்தையும் இந்த புகைப்படம் ஈர்த்து வருகிறது. ‘மிகவும் அருமையாக இருக்கிறது’. ‘நாங்கள் பார்த்ததிலேயே மிகவும் எளிமையாக, அந்த பயிற்சியின் பெயருக்கு ஏற்ப அமைந்த புகைப்படம்’ என இப்படத்திற்கு கமெண்ட்டுகள் குவிந்த வண்ணமிருக்கின்றன.