கோவை சம்பவம்… அரசியல் ஆதாயம் தேடும் பாஜக – திருமாவளவன் விமர்சனம்

கோவையில் கடந்த வாரம் காரில் சிலிண்ட வெடித்து ஜமேசா முபின் என்பவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவத்துக்கும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கும் தொடர்பு இருப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தொடர்ந்து கூறிவருகிறார். அவரது இந்தப் பேச்சுக்கு தமிழ்நாடு காவல் துறையும் தனது கண்டனத்தை பதிவு செய்தது. இந்தச் சூழலில் கடலூரில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், எம்.பியுமான திருமாவளவன் வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”குஜராத்தில் தொங்குபாலம் அறுந்து விழுந்ததில் நூற்றுக்கும் மேற்பட்ட இறந்த குடும்பத்திற்கு இந்திய அரசும் குஜராத் மாநில அரசும் இழப்பீடு தொகை வழங்க வேண்டும். இதுபோல் சம்பவம் வருங்காலங்களில் நடக்காமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதோடு நீதி விசாரணை உடனடியாக அமைக்க வேண்டும். கோவையில் நடந்த சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக அரசியல் ஆதாயம் தேடும் நோக்கில் பாஜகவினரும், ஆளுநரும் செயல்படுவது அதிர்ச்சி அளிக்கிறது.

தமிழக ஆளுநர் திமுக ஆட்சிக்கு எதிராக தவறான தகவல் கூறுகிறார். அவர் தனது பதவியான ஆளுநர் என்பதை மறந்து ஆர்எஸ்எஸ் தொண்டராக செயல்படுகிறார். அரசியல் பேசுகிறார். ஆன்மீகம் என்ற பெயரில் மதவாதம் பேசுகிறார். திராவிட இயக்கங்களுக்கு எதிராக அவதூறு பரப்புகிறார். கோவை சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தவறான கருத்து தெரிவித்துவருகிறார். இது தொடர்பாக தமிழ்நாடு காவல்துறை தலைவர் உரிய விளக்கம் அளித்துள்ளார். அதில் கோவை சம்பவம் தொடர்பாக ஏற்கனவே மத்திய அரசு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பாஜக சார்பில் தெரிவிப்பது திட்டமிட்ட உள்நோக்கத்தோடு அவதூறு பரப்புவதாகத்தான் தெரிகிறது‌.

மத்திய அரசு பொதுவான எச்சரிக்கை அறிவித்துள்ளனர். கோவையில் நடக்கப்போகிறது என்றோ? முஸ்லிம் நபர் இதில் ஈடுபட உள்ளார் என்றோ? யாரும் சொல்லவில்லை. மத்திய அரசு எச்சரிக்கை விடுத்தும் தமிழக உளவுத்துறை செயல்படவில்லை என அப்பட்டமாக அரசியல் ஆதாயம் தேடுவதை விடுதலை சிறுத்தைகள் கட்சி கண்டிக்கிறது. ஆனால் முதலமைச்சர் கோவை சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக என்.ஐ.ஏ விசாரிக்க உடனடியாக பரிந்துரை செய்தார்‌. கோவை வெடிப்பு சம்பந்தமாக அவதூறு பரப்பி வரும் பாஜகவை வன்மையாக கண்டிக்கிறோம் . கடலூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு, மாவட்டத்தின் வளர்ச்சியை மேற்கொண்டு வரும் மாவட்ட அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் மற்றும் என்னை குறித்து அவதூறாக பேசி இருப்பதை வன்மையாக கண்டிக்கின்றோம்.

அரசியலை அரசியலாக பார்க்க வேண்டும். தனிநபர் பெயரை உச்சரிப்பது அரசியல் அநாகரிகம் ஆகும். அநாகரிகம் அரசியலுக்கு என்றும் எங்களுக்கு உடன்பாடு இல்லை. மேலும் கடலூர் மாவட்டத்தில் பாஜகவினர் காலூன்ற எண்ணுகிறார்கள். காசு கொடுத்து கூட்டத்தைக் கூட்டி பேசி உள்ளனர். கடலூர் மாவட்டம் மட்டுமல்ல தமிழ்நாடு முழுவதும் பாஜகவினர் காலூன்ற முடியாது. வட மாநிலத்தைப் போல் வன்முறையை தூண்டி அதன் மூலம் குளிர் காயலாம் என நினைக்கிறார்கள்” என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.