5 நாட்களுக்கு முன்பு தான் சீரமைக்கப்பட்டு திறக்கப்பட்ட கேபிள் பாலம் அறுந்து விழுந்த விபத்தில் 146 பேர் பலி… குழந்தைகள் உட்பட 177 பேர் மீட்பு..!!

குஜராத் மாநிலம் மோர்பி நகரில் மச்சு ஆற்றின் குறுக்கே 150 ஆண்டுகள் பழமையான கேபிள் பாலம் சிதிலம் அடைந்து இருந்ததால் கடந்த சில மாதங்களுக்கு முன் சீரமைக்கப்பட்டது. குஜராத்தி புத்தாண்டு தினமான கடந்த 26ம் தேதி இந்த பாலம் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது.

விடுமுறை நாளான நேற்று மாலை 6.30 மணி அளவில் 400க்கும் மேற்பட்ட உள்ளூர் மக்களும், சுற்றுலா பயணிகளும் அந்த பாலத்திற்கு சென்று இயற்கை அழகை ரசித்துக் கொண்டிருந்தனர். அப்போது ஏராளமானோர் பாலத்தின் மீது குவிந்தனர். அவர்களின் எடையை தாங்க முடியாமல், பாலம் திடீரென அறுந்து விழுந்ததால் அதிலிருந்த அனைவரும் ஆற்றுக்குள் விழுந்தனர். பலர் நீரில் மூழ்கினர். பலர் நீந்தி தப்பிக்க முயன்றனர்.

குழந்தைகளும், பெண்களும், வயதானவர்களும் தப்பிக்க வழியின்றி நீரில் மூழ்கினர். இரவு நேரத்தில் நடந்த விபத்து என்பதால் ஆற்றில் விழுந்தவர்களை மீட்க முடியாத நிலை ஏற்பட்டது. தகவலறிந்த தேசிய பேரிடர் மீட்புப்படை வீரர்களும், மாநில பேரிடர் மீட்புப்படையினரும் நேற்றிரவு முதல் இன்று காலை வரை 177 பேரை மீட்டனர். 19 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்றிரவு நிலவரப்படி 60 பேர் பலியானதாக கூறப்பட்ட நிலையில், இன்று காலை நிலவரப்படி பலி எண்ணிக்கை 146 ஆக அதிகரித்துள்ளது. 20 மீட்புப் படகுகளுடன் போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. 100க்கும் மேற்பட்டோரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த பாலத்தின் பராமரிப்பை தனியார் நிறுவனம் மேற்கொண்டு வருவதால், அந்த நிர்வாகத்திற்கு எதிராக ஐபிசியின் 304, 308 மற்றும் 114 பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

விபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார். அதேபோல் பலியானோர் குடும்பங்களுக்கு குஜராத் அரசு சார்பில் தலா ரூ.4 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் பூபேந்திர படேல் கூறினார்.

பாலத்தை பார்வையிட வருபவர்களிடம் ரூ.17 டிக்கெட் வசூலிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு ரூ.12 டிக்கெட் கட்டாயமாக்கப்பட்டது. டிக்கெட் வசூலில் குறியாக இருந்த தனியார் நிறுவனம் மற்றும் ஆளும் பாஜக அரசு, மக்களின் உயிரில் அக்கறை ெசலுத்தவில்லை என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி உள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.