கடலூர் மாவட்டம் சிறுவத்தூர் பகுதியைச் சேர்ந்த பத்மாவதி என்பவர் மகப்பேறு சிகிச்சைக்காக கடந்த மாதம் கடலூர் அரசு மருத்துவமனையில் மகப்பேறு பிரிவில் அனுமதிக்கப்பட்டார். பத்மாவதிக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அவர் வயிற்றில் இருந்த குழந்தையை அறுவை சிகிச்சை மூலம் வெளியில் எடுத்துள்ளனர்.
இதையடுத்து, அனைத்து சிகிச்சைகளும் முடிந்த பின்னர் பத்மாவதியின் வயிறு தொடர்ந்து உப்பிக்கொண்டே இருந்தது. இது குறித்து மருத்துவரிடம் தெரிவித்ததில் அதற்கு சரியாக பதில் அளிக்காததால் உறவினர்கள் பத்மாவதியை புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
இதைத்தொடர்ந்து ஜிப்மர் மருத்துவர்கள் பத்மாவதியை பரிசோதனை செய்ததில் “அறுவை சிகிச்சை முடிந்து தையல் போடும் பொழுது மருத்துவர்கள் கருப்பையையும் குடலையும் ஒன்றாக தைத்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து மீண்டும் அவருக்கு அறுவை சிகிச்சை செய்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
மேலும், கடலூர் மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் இது குறித்து சரியாகப் பதில் அளிக்காததால் பத்மாவதியின் உறவினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர். இது போல் வேறு யாருக்கும் நடந்து விடக் கூடாது என்றும் உடனடியாக மருத்துவர்களை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.