குஜராத் கேபிள் பாலம் அறுந்து விழுந்தபோது பதிவான சிசிடிவி காட்சி

மோர்பி: குஜராத் மாநிலம் மோர்பி பகுதியில் நூற்றாண்டு பழமைவாய்ந்த கேபிள் பாலம் ஒன்று நொடிகளில் அறுந்து விழுந்தபோது பதிவான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. இதுவரை இந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 130-ஐ கடந்துள்ளது. 170 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், சம்பவத்தின் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

குஜராத்தின் மோர்பி நகரில் மச்சூ நதி பாய்கிறது. இந்த நதியின் குறுக்கே 233 மீட்டர் நீளம், 4.6 அடி அகலத்தில் கேபிள் நடைபாலம் அமைக்கப்பட்டிருந்தது. சுமார் 140 ஆண்டுகளுக்கு முன், மரம், கேபிள்கள் மூலம் கட்டப்பட்ட இந்தப் பாலத்தில் ரூ.2 கோடியில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கடந்த தீபாவளியன்று மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது. சுற்றுலாத் தலமான இங்கு நேற்று 500-க்கும் மேற்பட்டோர் திரண்டிருந்தனர். எதிர்பாராதவிதமாக பாலம் உடைந்து விழுந்ததில், அனைவரும் ஆற்றில் விழுந்தனர். இன்று காலை 8.30 மணி நிலவரப்படி 130-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்துப் பகுதியில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர், மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் ஆகியோர் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

சம்பவம் நடப்பதற்கு சில மணி நேரத்திற்கு முன்னர் அந்தப் பகுதிக்குச் சென்ற அகமதாபாத்தைச் சேர்ந்த விஜய் கோஸ்வாமி அங்கு நடந்தவற்றை விவரித்துள்ளார். “நான் அன்றைய தினம் எனது குடும்பத்தினருடன் மோர்பிக்குச் சென்றிருந்தேன். அப்போது பாலம் முழுவதும் மக்கள் கூட்டம் நிறைந்திருந்தது. சில இளைஞர்கள் வேண்டுமென்றே பாலத்தில் குதித்து அதனை உலுக்கி சேட்டை செய்து கொண்டிருந்தனர். அதனால், நான் இவ்வளவு கூட்டத்துக்கு இடையே பாலத்தில் செல்ல வேண்டாம் என்று திட்டத்தை ரத்து செய்து திரும்பினேன். திரும்புவதற்கு முன்னர் நான் அங்கிருந்த ஒருங்கிணைப்பாளர்களிடம் இளைஞர்கள் சிலர் பாலத்தை வேண்டுமென்றே உலுக்குவதாகச் சொன்னேன். ஆனால், அங்கிருந்தவர்கள் இத்தனைக் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாது என்று சொல்லிவிட்டு டிக்கெட் விற்பதிலேயே கவனமாக இருந்தனர். நான் அங்கிருந்து சென்று சில மணி நேரத்திலேயே விபத்து நடந்துள்ளது. அந்த விபத்தை நினைத்து நான் மிகவும் வருந்துகிறேன்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.