ராம்குமார் கொல்லப்பட்டாரா? – சுதந்திரமான விசாரணை மேற்கொள்ள அரசுக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு 

சென்னை: சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார் சிறையில் கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து சுதந்திரமான விசாரணை மேற்கொள்ள தமிழக அரசுக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மென் பொறியாளர் சுவாதி, கடந்த 2016-ம் ஆண்டு வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தென்காசி மாவட்டம் செங்கோட்டை தாலுகா டி.மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த ராம்குமார் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார், 18.9.2016 அன்று மின்சார வயரை கடித்து தற்கொலை செய்து கொண்டார். ராம்குமார் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது உறவினர்கள் குற்றம்சாட்டினர்.

இந்த விவகாரத்தை மாநில மனித உரிமை ஆணையத்தின் நீதிபதி துரை ஜெயச்சந்திரன் தாமாக முன்வந்து (சூமோட்டோ) வழக்காக எடுத்து விசாரித்தார். சிறைத்துறை அதிகாரிகள், ராம்குமாரின் உடலை பிரேத பரிசோதனை செய்த அரசு டாக்டர் உள்ளிட்டோரிடம் ஆணையம் விசாரணை மேற்கொண்டது.

விசாரணை முடிவில் நீதிபதி துரை ஜெயச்சந்திரன் பிறப்பித்த உத்தரவில், “சாட்சியம் மற்றும் ஆவணங்களை வைத்து பார்க்கும்போது உண்மையிலேயே ராம்குமார் மின்சார வயரை கடித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு யாரேனும் அவரது உடலில் மின்சாரத்தை பாய்ச்சினார்களா? அல்லது எய்ம்ஸ் டாக்டர் சுதிர்குப்தா அளித்த அறிக்கைப்படி மூச்சுத்திணறல் காரணமாக இறந்தாரா? என்பது உள்ளிட்ட பல்வேறு சந்தேகங்கள் இந்த ஆணையத்துக்கு எழுகிறது.

பிரேத பரிசோதனை மேற்கொண்ட டாக்டர் செல்வக்குமார், பிரேத பரிசோதனை அறிக்கையில் மின்சாரம் தாக்கி ராம்குமார் இறந்ததாக தெரிவித்துள்ளார். அதே வேளையில், அவராகவே மின்சாரத்தை தனது உடலில் பாய்ச்சி இறந்தாரா என்பது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. எனவே, ராம்குமார் மரணம் தொடர்பாக உண்மையை கண்டறிய சுதந்திரமான விசாரணை மிக அவசியமாகிறது.

உண்மையிலேயே ராம்குமார் மின்சார வயரை கடித்து மின்சாரத்தை பாய்ச்சி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது ராம்குமாரின் தந்தை பரமசிவன் குற்றம்சாட்டுவது போன்று கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து சுதந்திரமான விசாரணை மேற்கொள்ள வேண்டும்.

இழப்பீடு: ராம்குமாரின் தந்தை பரமசிவத்துக்கு இழப்பீடாக தமிழக அரசு ரூ.10 லட்சத்தை ஒரு மாதத்துக்குள் வழங்க வேண்டும். புழல் சிறையில் கைதிகளை கண்காணிக்க குறைவான எண்ணிக்கையிலேயே ஊழியர்களே இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, ராம்குமார் மரணத்திற்கு சிறை காவலர்களை மட்டுமே குறை கூற முடியாது. தமிழக அரசுக்கும் இதில் பொறுப்பு உள்ளது. சிறையில் போதிய அளவில் அலுவலர்கள், ஊழியர்களை நியமிக்க வேண்டியது அரசின் கடமை.சிறையில் கைதிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய போதுமான அதிகாரிகளை பணியமர்த்த வேண்டும்” என்று உத்தரவிட்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.