ஈரோடு மாவட்டம், அறச்சலூர் உள்வட்டத்துக்கு உள்பட்ட அட்டவணை அனுமன்பள்ளி, முகாசி அனுமன்பள்ளி, அறச்சலூர், 60 வேலம்பாளையம், வடுகப்பட்டி, கொல்லங்கோவில், கொங்குடையான்பாளையம், விளக்கேத்தி, எல்லைக்காட்டுப்புதூர் ஆகிய 9 வருவாய் கிராமங்களைச் சேர்ந்த 2,000 விவசாயிகள் சுமார் 5,000 ஏக்கரில் விளைவித்த கரும்பை, கரூர் மாவட்டம், புகழூர் ஈஐடி பாரி சர்க்கரை ஆலைக்கு ஒப்பந்த அடிப்படையில் கடந்த 30 ஆண்டுகளாக வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் திடீரென இப்பகுதி கரும்பு விவசாயிகளை சக்தி சர்க்கரை ஆலைக்கு கரும்பை ஒப்பந்த அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக சர்க்கரை துறை ஆணையர் மூலம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பது கரும்பு விவசாயிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து புகழூர் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் சண்முகராஜ் கூறியதாவது,
”ஈரோடு மாவட்டம், அறச்சலூர் உள்வட்டத்துக்குள்பட்ட 9 வருவாய் கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் புகழுர் ஈஐடி பாரி சர்க்கரை ஆலைக்குதான் கடந்த 30 ஆண்டுகளாக கரும்பை ஒப்பந்த அடிப்படையில் வழங்கி வருகிறோம். மற்ற ஆலைகள் எல்லாம் வெட்டிய கரும்புக்கு தொகையை நிலுவை வைத்திருந்த போதும், பாரி சர்க்கரை ஆலை எங்களுக்கு எந்தத் தொகையையும் நிலுவை வைத்ததில்லை. கரும்பு வெட்டிய 14 நாள்களில் பணம் பட்டுவாடா ஆகி விடும்.
இந்த ஆலையில் கரும்பு டன்னுக்கு ரூ.2,871 வீதம் வழங்கப்பட்டு வருகிறது. மற்ற ஆலைகளுடன் ஒப்பிடும்போது இதை விட குறைந்த தொகையையே வழங்குகின்றன.
எந்த பிரச்னையும் இன்றி பாரி ஆலைக்கு கரும்பை வெட்டிக்கொள்ள அனுமதித்து வந்த நிலையில், எங்களது விருப்பத்துக்கு மாறாக சக்தி சர்க்கரை ஆலைக்கு ஒப்பந்த அடிப்படையில் கரும்பு வழங்க வேண்டும் என்று 15 ஆண்டுக்கு முன் அப்போதைய சர்க்கரை துறை ஆணையர் உத்தரவிட்டார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஈஐடி பாரி சர்க்கரை ஆலை நிர்வாகத் தரப்பில் 2007 -ல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. சக்தி சர்க்கரை ஆலை தரப்பிலும் வழக்கு தொடரப்பட்ட நிலையில், 2012 -ல் எங்களது புகழூர் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் எங்களையும் இந்த வழக்கில் சேர்த்துக் கொள்ளுமாறு மனுத்தாக்கல் செய்தோம்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், விவசாயிகளிடம் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தி அதன் அடிப்படையிலேயே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சர்க்கரை துறை ஆணையருக்கு உத்தரவிட்டது.
அதன்படி நடத்தப்பட்ட கருத்துக்கேட்பு கூட்டத்தில், பாரி சசர்க்கரை ஆலைக்கு மட்டுமே கரும்பு வழங்க விரும்புவதாக விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு, விவசாயிகளின் சார்பில் 2,000 ஆதார் அட்டைகளின் நகல்களும், ஒப்புதல் கடிதமும் சமர்ப்பிக்கப்பட்டது.
இதையும் மீறி குறிப்பிட்ட 9 வருவாய் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் சக்தி சர்க்கரை ஆலைக்குதான் ஒப்பந்த அடிப்படையில் கரும்புகளை வெட்ட அனுமதிக்க வேண்டும் என்று கடந்த 21-ம் தேதி சர்க்கரை துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவு விவசாயிகளின் விருப்பத்துக்கு முற்றிலும் எதிரானது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் சர்க்கரை துறை ஆணையரின் உத்தரவுக்கு, தடை உத்தரவு வழங்கக்கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், வரும் 10ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் ஆஜராகி இதற்கான விளக்கத்தை அளிக்கக்கோரி சர்க்கரை துறை ஆணையருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
அதுவரையிலும் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என்றும் அந்த உத்தரவில் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
எங்களை பொருத்தவரை பாரி சர்க்கரை ஆலையிலேயே நாங்கள் நீடிக்க விரும்புவதால் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்க வேண்டும்” என்றார்.
சங்கத்தின் செயலாளர் நமச்சிவாயம் கூறுகையில், ”பாரி ஆலைக்கு கரும்பு வழங்குவதால் கடந்த 5 ஆண்டுகளாக ஏக்கருக்கு ரூ. 10,000 முதல் 17,500 வரை ஊக்கத்தொகை வழங்கி வருகின்றனர். வறட்சி காலத்திலும் உடனடியாக கரும்பை வெட்டிக் கொள்கின்றனர்.
கரும்பு போக்குவரத்து கட்டணம் முழுவதையும் பாரி ஆலையே ஏற்றுக் கொள்கிறது. மத்திய அரசு அறிவித்த (எஃப்ஆர்பி) கரும்பு விலையை விட கூடுதல் தொகையை பாரி ஆலை வழங்குகிறது.
சக்தி சர்க்கரை ஆலைக்கு, ஏற்கெனவே கீழ்பவானி, தடப்பள்ளி-அரக்கன்கோட்டை, காலிங்கராயன் பாசனப் பகுதிகளில் விளைவிக்கப்படும் 60 ஆயிரம் ஏக்கர் கரும்பை ஒப்பந்த அடிப்படையில் வெட்டிச் செல்கின்றனர். அப்படியிருக்கும்போது இந்தப் பகுதி விவசாயிகளுக்கு தொல்லை தரக்கூடாது.
விவசாயிகளுக்கு பல வகையிலும் நன்மை கிடைக்கும் போது அதிகாரிகள் அவர்கள் ஆதாயமடைவதற்காக இதுபோன்ற செயலில் ஈடுபடுகிறார்களோ என்று சந்தேகம் எழுகிறது” என்றார்.
இதுகுறித்து தலைமை கரும்பு அபிவிருத்தி அலுவலர் மாமுண்டியிடம் விளக்கம் கேட்டபோது, “இதுதொடர்பாக 2 வழக்குகள் நீதிமன்றத்தில் உள்ளதால் அதுபற்றி நான் கருத்து கூற முடியாது. மேலும் விவரங்கள் தேவையென்றால் சர்க்கரை துறை ஆணையரிடம் கேட்டுக் கொள்ளுங்கள்” என்றார்.
இதையடுத்து சர்க்கரை துறை ஆணையரின் அலுவலகத்துக்கு பலமுறை தொடர்பு கொள்ள முயன்றும் அந்த தொலைபேசியை யாரும் எடுக்கவில்லை. இதனிடையே சக்தி சர்க்கரை ஆலைக்கு கரும்பு வெட்ட அனுமதிக்க மாட்டோம் என்பதை வலியுறுத்தி ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்ட விவசாயிகள், பாரி ஆலைக்கு மட்டுமே கரும்பை வழங்குவோம் என்பதை வலியுறுத்தி பதாகைகளை ஏந்தி கோஷமிட்டு, பின்னர் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.