குஜராத்தில் பாலம் உடைந்து விபத்து -உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 141 ஆக அதிகரிப்பு

இந்திய மாநிலமான குஜராத்தில் சுற்றுலா பயணிகள் எடையை தாங்க முடியாமல் தொங்கு பாலம் அறுந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 141 ஆக அதிகரித்துள்ளது.

குஜராத் மாநிலம் மோர்பி நகரில் மச்சு ஆற்றின் குறுக்கே ஒரு தொங்கு பாலம் அமைக்கப்பட்ட , சுமார் 100 ஆண்டுகள் பழமையான பாலத்தை சீரமைக்கும் பணி கடந்த 6 மாதங்களாக நடந்து வந்தது. பணிகள் அனைத்தும் முடிவடைந்ததையடுத்து, மக்களின் பயன்பாட்டிற்காக குஜராத்தி புத்தாண்டு தினமான கடந்த 26 ஆம் திகதி பாலம் திறக்கப்பட்டது.

இந்நிலையில், விடுமுறை நாளான நேற்று (30) மாலை 6.30 மணியளவில் ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஏராளமானோர் திரண்டிருந்தனர். அப்போது அவர்களின் எடையை தாங்க முடியாமல், பாலம் திடீரென அறுந்து விழுந்துள்ளது.

 தேசிய பேரிடர் மீட்புப்படை வீரர்களும், மாநில பேரிடர் மீட்புப்படையினரும் உடனடியாக விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

எனினும், இன்று அதிகாலை நிலவரப்படி, பாலம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 141 ஆக உயர்ந்துள்ளதாக குஜராத் தகவல் துறை தெரிவித்துள்ளது.

மேலும், இதுவரை விபத்தில் சிக்கிய 177 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 19 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்தில் சிக்கியவர்களை தேடுதல் மற்றும் மீட்கும் பணியில், இராணுவம், கடற்படை, விமானப்படை, என்.டி.ஆர்.எப், தீயணைப்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

மீட்பு பணி இன்னும் நடந்து வருகிறது. மீட்பு பணியை துரிதப்படுத்த, இன்று அதிகாலை 3 மணிக்கு இராணுவ வீரர்கள் குழு, சம்பவ இடத்திற்கு சென்றடைந்தது என்று குஜராத் தகவல் துறை இன்று (31) காலை வெளியிட்ட தகவலில் தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.