பெரியார் எழுத்துக்கள்: வழக்கை வாபஸ் பெற்றார் கி.வீரமணி

தந்தை பெரியாரின் எழுத்துக்களும், கருத்துக்களும் தங்களுக்கே சொந்தமானவை என்று கூறி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை திராவிட கழக தலைவர் கி.வீரமணி வாபஸ் பெற்றுக் கொண்டார்.

சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் தலைவராக இருந்த

1925 ஆம் ஆண்டு முதல் 1938 ஆம் ஆண்டு வரை குடியரசு பத்திரிகையில் வெளியிட்ட கட்டுரைகளையும், கருத்துக்களையும் தொகுத்து நூல்களாக வெளியிட கொளத்தூர் மணியை தலைவராகக் கொண்ட தந்தை பெரியார் திராவிடர் கழகம் திட்டமிட்டது.

இதை எதிர்த்து கடந்த 2008 ஆம் ஆண்டு, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். அதில், சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் செயலாளராக தான் இருந்து வருவதால் தந்தை பெரியாரின் எழுத்துக்களும், கருத்துக்களும் தங்களுக்கே சொந்தமானவை. இவற்றை வெளியிட எங்களுக்குத் தான் காப்புரிமை உள்ளது. பெரியாரின் கருத்துக்களை நூல்களாக தொகுத்து வெளியிட தந்தை பெரியார் திராவிடர் கழகத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், புத்தகம் வெளியிட இடைக்கால தடை விதித்திருந்தது.

பின்னர் வழக்கை விசாரித்த அப்போதைய நீதிபதி சந்துரு, கடவுள் இல்லை, மதம் இல்லை, ஜாதி இல்லை என்று பிரச்சாரம் செய்தவர் தந்தை பெரியார், சமூகத்தில் மண்டிக்கிடந்த மூட நம்பிக்கைகளுக்கு எதிராக குரல் கொடுத்தவர் எனவும், தனது கருத்துக்களும், எழுத்துக்களும், பேச்சுக்களும் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்பதே பெரியாரின் நோக்கம் என்று கூறி, தடையை நீக்கி உத்தரவிட்டிருந்தார்.

தனி நீதிபதி இந்த உத்தரவை எதிர்த்து இரு நீதிபதிகள் அமர்வில் திராவிட கழக தலைவர் கி.வீரமணி மேல்முறையீடு செய்திருந்தார். வழக்கை விசாரித்த அப்போதைய நீதிபதிகள் இப்ராகிம் கலிபுல்லா, கிருபாகரன் அமர்வு, தனது காப்புரிமையை யாருக்கும் அவர் எழுதி தரவில்லை, அவருடைய எழுத்துக்களும் பேச்சும் பொது தளத்திற்கு வந்துவிட்டது என்று கூறி தனி நீதிபதி உத்தரவில் தலையிட மறுத்துவிட்டனர்.

இந்நிலையில் நிலுவையில் இருந்த இந்த வழக்கு நீதிபதி எஸ்.சுந்தர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது திராவிட கழக தலைவர் வீரமணி சார்பில், இந்த வழக்கை திரும்ப பெற்றுக் கொள்வதாக தெரிவிக்கப்பட்டது. அதை ஏற்றுக் கொண்ட நீதிபதி வழக்கை முடித்து வைத்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.