புதுடெல்லி:பயனர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்தும் ‘ப்ளூ டிக்’ வசதிக்கு இனி மாதக் கட்டணம் வசூலிக்க இருப்பதாக வரும் தகவலை நம்பவில்லை என்று மத்திய தொழில்நுட்பத் துறை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் இறுதியில் சமூக வலைதள நிறுவனமான ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கி இருந்தார். இருந்தாலும் இரு தரப்புக்குமான டீல் இழுபறியாக இருந்து வந்தது. இது தொடர்பாக நீதிமன்றம் வரை பஞ்சாயத்து சென்ற நிலையில, ஒருவழியாக ட்விட்டர் உரிமை எலன் மஸ்க்கிடம் வந்துள்ளது. இந்தநிலையில், அந்நிறுவனத்தின் உரிமையாளர் என்ற முறையில் பல்வேறு மறுசீரமைப்பு பணிகளை மஸ்க் மேற்கொண்டு வருகிறார். பயனர்களின் அடையாளங்களை உறுதிப்படுத்தும் ப்ளூ டிக் முறைக்கு கட்டணம் வசூலிக்கும் வழிமுறை குறித்து ஆராயுமாறு தனது ஊழியர்களுக்கு எலான் மஸ்க் தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், இதுகுறித்து ட்விட்டர் தரப்பில் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.
இந்த நிலையில், ‘ட்விட்டரில் ப்ளு டிக் வசதிக்கு கட்டணம் வசூலிக்கப்படுமா?’ என மத்திய தொழில்நுட்பத் துறை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகரிடம் கேட்கப்பட்டது. அதற்கு , “இது உண்மை இல்லை என்று நினைக்கிறேன். தவறான தகவல் பரவுவதை நிறுத்துங்கள். நிச்சயம் இது ட்விட்டருக்கு சவாலான ஒன்று. இம்மாதிரியான தகவல்கள் பரப்பப்படுவது குறித்து ட்விட்டர் விளக்கம் அளிக்க வேண்டும். நான் இதனை நம்பவில்லை” என்று தெரிவித்தார்.
இதனிடையே, வெறுப்பூட்டும் வகையில் முரண்பாடான கருத்துகளை தெரிவித்து வந்த நபர்களின் ட்விட்டர் கணக்குகளுக்கு நிரந்தர தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனை தற்போது மஸ்க் திரும்பப் பெற வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.