கொள்ளிடம்: கொள்ளிடம் பகுதியில் 1,200 ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் மீண்டும் தண்ணீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் அருகே மகேந்திரபள்ளி, காட்டூர், கோரை திட்டு ஆகிய கிராமங்களில் விவசாயிகள், 1200 ஏக்கரில் நேரடி விதைப்பு மற்றும் நடவு முறையில் சம்பா நெற்பயிர் சாகுபடி செய்துள்ளனர். கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள இந்த கிராமங்களில் ஆற்றில் ஏற்பட்ட தொடர் வெள்ளப்பெருக்கால், 10 நாட்களுக்கும் மேலாக பயிர்கள் தண்ணீரில் மூழ்கி இருந்தது. இதனால் நெற்பயிர்கள் சேதமடைந்தது.
இந்நிலையில் கடந்த 4 நாட்களாக கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் முற்றிலும் குறைந்தது. இதில் விளை நிலங்களில் தேங்கியிருந்த தண்ணீரும் வடிந்தது. இதனையடுத்து எஞ்சிய பயிர்களை காப்பாற்ற உரங்கள் இடும் பணிக்கு விவசாயிகள் தயாராகி வந்தனர்.
இந்நிலையில் தெற்குராஜன் பாசன ஆற்றின் வழியே கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் கிளை வாய்க்கால்கள் மூலம் தண்ணீர் உட்புகுந்து மகேந்திரப்பள்ளி, காட்டூர், கோரை திட்டு ஆகிய கிராமங்களில் 1,200 ஏக்கர் சம்பா பயிர்கள் மீண்டும் தண்ணீரில் மூழ்கி உள்ளது. விளைநிலங்களில் தேங்கிய தண்ணீரை வெளியேற்ற விவசாயிகள் போராடி வரும் நிலையில், வடகிழக்கு பருவமழையும் துவங்கியதால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.